“மட்டக்களப்பு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி” கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பம்!
ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹெந்துன்நெத்தி தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் வர்த்தகம், தொழில்துறை மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மட்டக்களப்பு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி” நேற்று (அக்டோபர் 01) வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.
இக்கண்காட்சி இன்று முதல் வரும் அக்டோபர் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மூன்றாவது தடவையாக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சிக்கு மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் பூரண ஆதரவை வழங்கியுள்ளதுடன், அதன் தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா அவர்களின் தலைமையில் இக்கண்காட்சி நடைபெற்றது.
இன்றைய ஆரம்ப விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹெந்துன்நெத்தி கலந்து கொண்டு கண்காட்சியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
மேலும், விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இன்றைய தொடக்க விழாவில் மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளன உறுப்பினர்கள்,|உள்ளூர் வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,
இங்கு வருகை தந்துள்ள விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழிற்துறை சார்ந்த அனைவருக்கும் இது ஒரு மிகச்சிறந்த சந்தர்ப்பமாக அமைகின்றது.
எமது விவசாயிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பல வாய்ப்புகள் இங்கு காணப்படுகின்றன.
எனவே, இவ்வாறான கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம், அந்த நவீன தொழில்நுட்பங்களை அவர்களது கைகளுக்குக் கொண்டு சேர்க்க முடியும்.
முக்கியமாக, ஏற்றுமதி தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முன்னணி தொழிலதிபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஒரு முக்கிய பாலமாக இக்கண்காட்சி அமைகின்றது.
எமது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இவ்வாறான தேசிய அளவிலான கண்காட்சிகளை நடத்துவதன் மூலம் தொழில்துறையின் வளர்ச்சிக்காக அதிகளவில் உதவ முடியும். இதன் ஒரு அங்கமாக, எமது ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஏற்றுமதித் துறையை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில், நேற்று நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்து பல வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டோம்.
அத்துடன், புதிய வர்த்தகத் திட்டங்களை ஆரம்பிப்பவர்கள் மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் தரச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காக, கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘இன்குபேஷன் சென்டர்’ ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
இதன் மூலம், எமது தொழிலதிபர்கள் சான்றிதழ்களைப் பெற கொழும்புக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, இங்கேயே அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், புதிய வர்த்தகங்களுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளை மலிவு விலையில் உற்பத்தி செய்து, சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் இதன் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச ‘எக்ஸ்போ’ கண்காட்சி நடைபெறவுள்ளதால், அதற்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கொழும்புக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, நாட்டின் அனைத்துப் பகுதி தொழிலதிபர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதே எமது முக்கிய நோக்கமாகும்.
எமது மக்களுக்குத் தேவையான நில வசதிகள், தொழிலாளர் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை எமது அமைச்சின் ஊடாகத் தொடர்ந்து வழங்கி, இந்தத் தொழிற்துறையை வெற்றிபெறச் செய்வோம் என்றார்.











