தம்பிலுவில் பகுதியில் சர்வதேச சிறுவர் தினம் கறுப்பு தினமாக அனுஷ்ரிப்பு!
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில், சர்வதேச சிறுவர் தினம் கறுப்பு தினமாக இன்று (01) திருக்கோவில் – தம்பிலுவில் மத்திய சந்தை வளாகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களை நினைவுகூரும் வகையில் பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன், நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி,
“சர்வதேச சிறுவர் தினம் இலங்கையின் எட்டு மாவட்டங்களில் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வட்டுவாகலில் குடும்பம் குடும்பமாக ஒப்படைக்கப்பட்டவர்களில் ஐந்து வயது முதல் 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இருந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரை எந்தவிதமான பதிலும் தகவலும் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகளின்போது சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களின் நிலைமை தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்படுவதுடன், அவர்களது குடும்பங்களுக்கு உரிய நீதி மற்றும் உண்மை கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கிடைக்கும் போதே நாட்டின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிலைப்பாடு அர்த்தமுள்ளதாக இருக்கும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தமது அமைப்பின் தரவுகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலைமை தொடர்பில் இதுவரை உரிய பதிலும் நீதியும் கிடைக்காத நிலையில், அவர்களது தாய்மார்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும் தம்பிராசா செல்வராணி மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிறுவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.








