கடுகண்ணாவை மற்றும் கிரிந்திவெல பகுதிகளில் இருவர் கொ**லை.!
கடுகண்ணாவை மற்றும் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இம்புலஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் 75 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, வீட்டின் உள்ளேயிருந்து உயிரிழந்த பெண்ணின் கணவரால் எழுதப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று பொலிஸாரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இந்த கொலையை உயிரிழந்தவரின் கணவரே செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலைகளுக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.
இந்த கொலைச் சம்பவத்தையடுத்து, சந்தேகநபரான கணவர் வேயங்கொடை பொலிஸ் பிரிவில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் மற்றும் கணவரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கடுகண்ணாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலுன்கல பகுதியில் மதுபான போத்தலால் தாக்கப்பட்டு காயமடைந்த 39 வயதுடைய நபர் ஒருவர் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மதுபான போத்தலை உடைத்து உயிரிழந்தவரின் நெஞ்சுப் பகுதியில் குத்தி இக்கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் கிரிந்திவெல மற்றும் கடுகண்ணாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.