உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கில் 3 புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
124 பார்வைகள்

வடக்கு மாகாணத்தில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் ஆகிய மூன்று முதலீட்டு வலயங்களின் முன்னேற்றம், முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்கள் மற்றும் முதலீடுகளை விரைவாக ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்த ஹூலன்ஹமுவ தலைமையிலான குழுவினருக்கிடையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்த ஹூலன்ஹமுவ தலைமையிலான குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று முதலீட்டுக்குப் பொருத்தமான இடங்கள் மற்றும் நிலைமைகளை நேரில் பார்வையிட்டனர். அதன் தொடர்ச்சியாக ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, வடக்கு மாகாணத்தில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள மூன்று முதலீட்டு வலயங்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, முதலீட்டு வலயங்களுக்காக அடையாளம் காணப்பட்ட காணிகளை இலங்கை முதலீட்டுச் சபையிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் நீண்ட காலம் எடுத்துவருவது தொடர்பில் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த முதலீட்டுச் சபையின் தலைவர், காங்கேசன்துறை மற்றும் பரந்தன் பகுதிகளுக்கான காணிகளை விரைவில் முதலீட்டுச் சபையிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், அங்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். குறித்த பகுதிகளைத் தாம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, முதலீடுகளை ஈர்ப்பதுடன், அவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான திறமையான மனிதவளத்தை உறுதிப்படுத்துவதும் அவசியம் என்று முதலீட்டுச் சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகத் துறையினருடன் தாம் மேற்கொண்ட கலந்துரையாடல்களில், பல்வேறு அரச திணைக்களங்களுடன் தொடர்புடைய நடைமுறைச் சிக்கல்கள் முதலீட்டாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்குத் தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களை மாதாந்தம் ஒரே இடத்தில் ஒன்றுகூட்டி, முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாக ஆராய்ந்து தீர்வு காணும் பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அவர் ஆலோசனை தெரிவித்தார்.

இதன்போது, முதலீட்டாளர்களுக்காக ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் இணையத் தளம் தொடர்பிலும், அதன் ஆரம்பகட்டச் செயற்பாடுகள் குறித்தும் ஆளுநர் விளக்கமளித்தார். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் வவுனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் எடுத்துரைத்தார்.

இதேவேளை, இலங்கையின் ஏனைய பகுதிகளில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது பொதுமக்களின் அணுகுமுறைகள் மாறுபடக்கூடும் என்றும், வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சில முதலீட்டு முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புகள் எழும் நிலை காணப்படுகின்றது என்றும் முதலீட்டுச் சபையின் தலைவர் தனது அவதானத்தைப் பகிர்ந்து கொண்டார்.

தென் பகுதிகளிலும் ஆரம்பகாலத்தில் சில முதலீடுகள் தொடர்பில் இதுபோன்ற எதிர்ப்புகள் காணப்பட்டன என்றும், பின்னர் அவற்றின் பொருளாதார முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொண்டதன் பின்னர் அணுகுமுறைகள் மாறியன என்றும் அவர் தெரிவித்தார்.

முதலீட்டுச் சபையின் நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண நிர்வாகத்தின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஆளுநர் நா.வேதநாயகன் இதன்போது உறுதியளித்தார்.

வடக்கு மாகாணத்தில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும், தொழில் நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் முதலீட்டு வலயங்களை விரைவாக முன்னெடுப்பது முக்கியமானதாக அமைவதுடன், இதற்குத் தேவையான நிலம், உட்கட்டமைப்பு, மனிதவளம் மற்றும் நிர்வாக வசதிகளை ஒருங்கிணைந்து முன்னெடுப்பதன் அவசியமும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

74 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

66 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

61 0 0