வடக்கில் விதிமுறைகளுக்குப் புறம்பாக இயக்கப்படும் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை.!
வடக்கு மாகாணத்தில் மாணவர் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் அனுமதிக்கு முரணாக அல்லது விதிமுறைகளுக்குப் புறம்பாக இயக்கப்படும் பேருந்துகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் 15 வருடங்களுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும் எனவும், அதற்கு மேற்பட்ட வயதுடைய பேருந்துகள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளரிடமிருந்து உரிய தகுதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர் சேவைகளில் பயணிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டணச் சலுகைகளும் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், 12 பேருக்குட்பட்ட மாணவர்களுக்கு 25 வீத கட்டணச் சலுகையும், 12 பேருக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 50 வீத கட்டணச் சலுகையும் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு 50 வீத கட்டணச் சலுகையும், ஆசிரியர்களுக்கு முழுக் கட்டணமும் நடைமுறையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேவைகளை நெறிப்படுத்துவதற்காக ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு 24.09.2026 முதல் 24.10.2026 வரை மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இக்காலப்பகுதிக்குள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் தேவையான அனுமதிகளைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த காலக்கெடுவுக்குள் உரிய அனுமதிகளைப் புதுப்பிக்கத் தவறும் பேருந்துகள் மீது 24.10.2026க்குப் பின்னர் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவை கைப்பற்றப்படும் எனவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, அதிகார சபையின் முகாமைத்துவ சபைக் கூட்டத்தில் குறிப்பிட்ட சில பேருந்துகளுக்கு மாத்திரம் அலுவலர்களுக்கான சேவையை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கு முரணாக பல பேருந்துகள் முறையற்ற வகையில் இயக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனுமதிக்கப்பட்ட சுழற்சி முறைக்கு அமைவாக இயங்க வேண்டிய பேருந்துகள் மற்றும் உரிய அனுமதியின்றி இயக்கப்படும் பேருந்துகள் தொடர்பில் வார நாட்களில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, விதிமுறைகளை மீறும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுமதிக்கப்பட்ட பேருந்துகள் தொடர்பான விவரங்கள் மற்றும் அறிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
போர்க் காலகட்டத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாணவர் போக்குவரத்துச் சேவைகளை வழங்கியவர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது எனத் தெரிவித்த அவர், தற்போதைய நிலையில் மாணவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் அரச கொள்கைகளுக்கு அமைவாக அனைத்து போக்குவரத்து சேவைகளும் உரிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டே முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.