மக்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தவே முடியாது : ஆர்ப்பாட்டம் செய்ய மக்களுக்கு முழு உரிமை உண்டு!!
கொழும்பு, செட்டியார் தெருவில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மகேஸ் குமாரசிங்க ஆகியோரைத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு தனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
“பொலிஸ் தனது கடமையைச் செய்யலாம். ஆனால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது. அநீதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு. அதைப் பொலிஸ் தடுக்குமானால், நானே, மனோ கணேசன், நேரடியாகக் களத்துக்கு வருவேன்” என்று பொலிஸ்மா அதிபருக்கு நேரடியாக எச்சரித்தேன் என்று மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
செட்டியார் தெரு விவகாரத்தில் எவரையும் கைது செய்ய முடியாது எனவும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் எனவும் பொலிஸார் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றும் மனோ கணேசன் எம்.பி. குறிப்பிட்டார்.
புறக்கோட்டை மற்றும் மாளிகாவத்தை பொலிஸார் இந்த விவகாரத்தில் இனித் தலையிடக் கூடாது என்றும், இது தொடர்பில் மத்திய கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மகேஸ் குமாரசிங்கவின் தலைமையில் நாளை திங்கட்கிழமை காலை எஸ்.எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கண்ட அனைத்து உறுதிமொழிகளையும் பொலிஸ்மா அதிபர் தனக்கு வழங்கியதை அடுத்து, கொழும்பு மத்திய எஸ்.எஸ்.பி. மற்றும் புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு உடனடியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்சமயம் தான் கொட்டகலையில் இறுதிச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்டிருக்கும் நிலையிலும், தொலைபேசி ஊடாகவே மேற்படி அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு இணக்கப்பாட்டைக் எட்டியுள்ளதாகவும் மனோ கணேசன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
……………………..