தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து நல்லூர் நோக்கி புறப்பட்ட திலீபனின் நினைவு ஊர்தி.!
முல்லைத்தீவு – விசுவமடு, தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய நினைவு ஊர்தி, யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிட வளாகத்தை நோக்கி இன்று புறப்பட்டது.
தேராவில் மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவின் செயலாளர் சுந்தரலிங்கம் யோகலிங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த நினைவு ஊர்திப் பவனியில், தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஆரம்பமானது.
இதன்போது திலீபனின் உருவப்படத்திற்கு மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியதுடன், நினைவு ஊர்தி நல்லூரை நோக்கி புறப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வேலாயுதம் கரிகாலன், முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா, தேராவில் மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (26) தாயகப் பகுதிகளிலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

