உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கு மாகாண ஆளுநர் மன்னாரிற்கு களப்பயணம் : மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
180 பார்வைகள்

மன்னார் நகர சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையம், மன்னார் பாலத்தடி சுற்றுலாப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நீலாசேனை மக்களின் நீண்டகால காணிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (25) வெள்ளிக்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன் போது மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன், மன்னார் நகர பிரதேச செயலாளர் கே.காந்தீபன் மற்றும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சாஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலாவது கட்டமாக, குருசுநகர்–சின்னக்கடை பகுதியில் அமைந்துள்ள மன்னார் நகர சபைக்குச் சொந்தமான திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தை ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது மன்னார் நகர சபையின் செயலாளரும் அங்கு பிரசன்னமாகி யிருந்தார்.

சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்நிலையத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளால் அருகில் உள்ள மக்கள் துர்நாற்றத்திற்கு முகம் கொடுத்து வருவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தின் மதில்களை உயர்த்துவதற்கான பரிந்துரையும் முன்வைக்கப்பட்டது.

மேலும், அங்குள்ள கழிவுக் குவியல்கள் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதனிடையே, வடக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் 80 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள எரியூட்டிக் கட்டமைப்பு மற்றும் மறுசுழற்சி மையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களையும் ஆளுநர் நேரில் பார்வையிட்டார்.

அத்துடன், மன்னார் நகர சபை தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை மாத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். அவ்வாறு இல்லாவிட்டால் குறித்த பகுதி மிக மோசமான கழிவுக் குவியலாக மாறிவிடும் எனவும் அவர் எச்சரித்தார்.

கடந்த காலங்களில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைக் கொள்வனவு செய்து வந்த நிறுவனம் தற்போது அவற்றைக் கொள்வனவு செய்யாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கலாச்சார மண்டபத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியையும் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இது தொடர்பான கோரிக்கையை உரிய அமைச்சிடம் முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, மன்னார் பாலத்தடியில் நகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வரும் இயற்கை பூங்காவின் அபிவிருத்தி பணிகளையும் ஆளுநர் பார்வையிட்டார்.

பணிகளை மேலும் துரிதப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து வன உயிரினத் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள பார்வைத் தளத்தையும் ஆளுநர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

அதன் பின்னர், நீண்டகாலமாக காணிப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வரும் நீலா சேனைப் பகுதிக்கு ஆளுநர் நேரில் சென்று நிலைமைகளை கேட்டறிந்தார்.

கட்டுக்கரை குளத்தின் நீர் பிடிப்பு பகுதிக்குள் குறித்த குடியிருப்புகள் அமைந்துள்ளமையால், அவை தொடர்பாக மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தால் பிரச்சினைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், நீண்டகாலமாக அப்பகுதியில் மக்கள் குடியிருந்து வருவதால், அவர்களுக்குரிய காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதை ஆராய்ந்த ஆளுநர், நில அளவை வரைபடத்தை பெற்று, சம்பந்தப்பட்ட தரப்புகளை உள்ளடக்கிய குழுவொன்றை அமைத்து, நிலைமையை முழுமையாக ஆராய்ந்து உரிய தீர்மானத்தை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நடைமுறை பிரச்சனைகளை நேரில் அவதானித்து, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி தீர்வுகளை நோக்கி நகர்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக களப்பயணம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

150 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

141 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0