மட்டக்களப்பு மாநகரசபைக்கும் காத்தான்குடி நகரசபைக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் பொலீசாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் காத்தான்குடி நகரசபையினால் வருமான வரி அறவீடுசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரு தரப்பினருக்கு இடையே இன்றைய தினம் ஏற்பட்ட முறுகல் நிலையானது காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டினால் முடிவுக்குவந்தது.
மட்டக்களப்பு மாநகரசபை –காத்தான்குடி நகரசபையின் எல்லைப்பகுதியாகவும் மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாகவும் காணப்படும் மஞ்சந்தொடுவாய் 16ஆம் வட்டாரத்தில் உள்ள பள்ளிவாயல் ஒன்றில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் வருமான வரியை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை முன்னெடுப்பதற்கான சென்றிருக்கின்றனர்.
இந்தவேளையில் குறித்த பள்ளிவாயலில் ஏற்கனவே காத்தான்குடி நகரசபையின் ஊழியர்களினாலும் வருமான வரிகள் அறவிடும் நடமாடும்சேவை நடாத்தப்பட்டுக்கொண்டிருந்தது.
இதன்போது மாநகரசபை ஊழியர்கள் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் காத்தான்குடி நகரசபையினர் வருமான வரியை அறிவிடுவதை கடுமையாக எதிர்த்த நிலையில் அங்குவந்த மட்டக்களப்பு மாநகரசபையின் குறித்த வட்டார உறுப்பினர்களும் வருகைதந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த செயற்பாடுகள் கடந்த நான்கு வருடமாக காத்தான்குடி நகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றபோதிலும் அதற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்காத காரணத்தினாலேயே இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக குறித்த பகுதுp மக்கள் தெரிவித்தனர்.
தமது நகரசபை தவிசாளர் மற்றும் உயர் அதிகாரிகள் தமக்கு வழங்கிய பணிப்புரைகளையே தாங்கள் முன்னெடுப்பதாக இங்குவருகைதந்து வருமான வரியை அறவீடுசெய்த அதிகாரிகள் தெரிவித்த நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்படவே காத்தான்குடி பொலிஸாருக்கு இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையினால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்குவந்த காத்தான்குடி பொலிஸார் விசாhணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது இரு தரப்பினரையும் வருமான வரி அறவீடுசெய்வதை நிறுத்தி நிர்வாக ரீதியாக தீர்மானம் ஒன்றை எடுத்த பின்னர் அறவீட்டை முன்னெடுக்குமாறும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு இரு தரப்பினரையும் வருகைதருமாறு பொலிஸார் தெரிவித்ததை தொடர்ந்து இரு தரப்பினரும் தமது செயற்பாடுகளை நிறுத்தி அங்கிருந்து சென்றனர்.
குறித்த பகுதியில் மட்டக்களப்பு மாநகரசபையினர் முறையான அறவீடுகளை முன்னெடுக்காத நிலையில் பொதுமக்கள் இவ்வாறு காத்தான்குடி நகரசபை அறவீடுகளை முன்னெடுக்கும்போது அங்கு வருமான வரிகளை செலுத்தும் நிலையேற்படுவதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான பிரச்சினை நான்கு வருடங்களுக்கு மேல் நிலவுவதன் காரணமாக இதற்கான நிரந்தர தீர்வொன்றை காணுமாறும் இதன் மூலம் எதிர்காலத்தில் முறுகல்நிலைகள் ஏற்படாமல் இருக்க இருதரப்பினரும் முடிவுகளை எடுக்கவேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசமாகவும் அப்பகுதியில் மட்டக்களப்பு மாநகரசபையின் வட்டார உறுப்பினர்களும் இருக்கும் நிலையிலும் காத்தான்குடி நகரசபையினர் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் இதன்போது கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து எதிர்காலத்தில் இந்த பிரச்சினைக்கான தீர்வினை காணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்தார்.














