உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு எதிரான தீர்ப்பு வாசிப்பு ஆரம்பம்.!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று அறிவிக்கத் தொடங்கியுள்ளது.
இவ்வழக்கின் தீர்ப்பு இன்று காலையில் வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தீர்ப்பை அறிவிக்கும் பணிகள் இன்று நண்பகல் 12.30 மணியளவிலேயே நீதிபதிகள் குழாத்தினால் ஆரம்பிக்கப்பட்டன.
தீர்ப்பை வாசிக்கத் தொடங்குவதற்கு முன்னர், மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தின் தலைவரான நீதிபதி நவரத்ன மாரசிங்க, குறித்த தீர்ப்பை அச்சிடுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இத்தாமதம் ஏற்பட்டது என விளக்கமளித்தார்.
மேலும், இத்தாமதத்திற்காக நீதிமன்றம் அனைத்துத் தரப்பினரிடமும் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து தீர்ப்பை அறிவிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், தற்போது மதிய போஜன இடைவேளைக்காக வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.