22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக செப்டம்பர் 24ல் கொழும்பில் பிரம்மாண்ட போராட்டம்!
22வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அரசாங்கம் நாட்டில் ஒரு சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அரசாங்கம் கொண்டுவர முயலும் 22வது அரசியலமைப்புத் திருத்தமானது நாட்டின் மேம்பாட்டிற்கோ அல்லது மக்களின் நலனுக்கோ உகந்தது அல்ல எனச் சுட்டிக்காட்டிய அவர், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், வறுமையை ஒழித்தல், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளைப் பலப்படுத்துதல் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் தனது அதிகாரத் தக்கவைப்பிற்காகவே அரசியலமைப்பைப் பயன்படுத்த முயல்வதாகத் தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்ட விதிகளையும் அரச அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி ஜனநாயகத்தை சீர்குலைக்க அரசாங்கம் முயற்சித்தால், அதற்கு எதிராகப் போராடுவது எதிரணியின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனவே, இந்த 22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக வரும் செப்டம்பர் 24ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பொல்தூவ சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பிரம்மாண்ட மக்கள் போராட்டப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
இதில் ஏனைய எதிர்க்கட்சிகளும் பங்கேற்கவுள்ள நிலையில், அரசாங்கத்தின் இந்த சர்வாதிகார முயற்சிக்கு எதிராக நாட்டின் அனைத்து மக்களையும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்பட்டிருந்தால், அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகியிருக்க முடியாது என்ற வலுவான கருத்து மக்களிடையே நிலவுவதாகக் குறிப்பிட்ட திஸ்ஸ அத்தநாயக்க, இதைக் கருத்திற்கொண்டு இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயல்களுக்கு எதிராக எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்தே களமிறங்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி கூறினாலும், தற்போதைய ஆட்சியின் கீழ் 323 கொள்கலன் மோசடி, தரமற்ற 19 நிலக்கரி கப்பல்களை இறக்குமதி செய்தமை, திறைசேரி நிதி முறைகேடு மற்றும் தபால் திணைக்கள நிதி மோசடி போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். எனினும், அரசாங்கம் தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஒரு சட்டத்தையும், ஏனையோருக்கு வேறு ஒரு சட்டத்தையும் பயன்படுத்தி நீதியை வளைப்பதாக அவர் சாட்டினார்.
எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களான சாம்பூர் மின் உற்பத்தி நிலையம், திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தங்கள், இந்தியா-இலங்கை எண்ணெய் குழாய் திட்டம் மற்றும் துறைமுக நகரம் (Port City) போன்ற திட்டங்களை கடுமையாக எதிர்த்த தேசிய மக்கள் சக்தி, இன்று ஆட்சியில் அமர்ந்ததும் அதே திட்டங்களையே முன்னெடுத்து வருவதாக அவர் விமர்சித்தார்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களைத் திறந்து வைப்பதைத் தவிர, இந்த அரசாங்கத்திடம் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் எதுவுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், 50 பல்கலைக்கழகங்களை உருவாக்குவோம் என்றும், ஒவ்வொரு 3 கிலோமீட்டருக்கும் வசதிகள் கொண்ட பாடசாலைகளை அமைப்போம் என்றும் தேர்தலுக்கு முன் உறுதியளித்த அரசாங்கம், இன்று 1,800 க்கும் மேற்பட்ட சிறிய பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுத்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டது என்பது தெளிவாகியுள்ளதாகவும், இனிமேலும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்ற முடியாது என்றும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.