மலையகத்தில் காணப்படும் ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதன் ஊடாக உயிர் ஆபத்துகளையும், பொருள் சேதங்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும் என நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், இந்நாள் உறுப்பினருமான கே.குழந்தைவேல் ரவி தெரிவித்தார்.
இது சம்பந்தமாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மலையகத்தில் நகரங்கள் மற்றும் தோட்டப் பகுதிகளை அண்மித்து பிரதான போக்குவரத்துப் பாதை ஓரங்களில் பாரிய மரங்கள் காணப்படுகின்றன. அவற்றை உரிய நேரத்தில் முறைப்படி வெட்டத் தவறுவதால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
உதாரணமாக கடந்த வாரம் நாவலப்பிட்டி கலபட தோட்டத்தில் பாரிய மரமொன்று முச்சக்கரவண்டி மீது சரிந்து விழுந்ததில் அதில் பயணித்த பாடசாலை மாணவன் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
அதேபோல் அண்மையில் பெய்த பலத்த மழையின் போது பூண்டுலோயா பகுதியில் பாரிய மரமொன்று பிரதான வீதியின் குறுக்கே சாய்ந்து விழுந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களும், மாணவர்களும் சொல்லொணா சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது.
அத்தோடு கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட டித்வா புயலில் மண்சரிவுகளோடு மரங்களும் சரிந்து விழுந்து பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இன்னும் ஆபத்தான எத்தனையோ மரங்கள் எந்த நேரத்தில் விழுந்து பாதிப்புகளை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சமும் தலைதூக்கியுள்ளது.
எனவே, சேதங்கள் ஏற்பட்ட பிறகு நிவாரணங்களை தேடுவதை தவிர்த்து, அனர்த்தங்கள் நேர்வதற்கு முன்னதாகவே தகுந்த நடவடிக்கை எடுத்து பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.
இது தொடர்பாக உள்ளூராட்சி சபைகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை, தோட்ட நிர்வாகங்கள், மின்சார சபை, வன இலாகா போன்றன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.










