கடந்த சில மாதங்களாக நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
நாளாந்தம் இந்த பேருந்து தரிப்பிடத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பல நூற்றுக்கணக்கான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் பல ஆயிரக்கணக்கான பயணிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் உல்லாசப் பயணிகள் வந்து செல்லும் இலங்கையின் குட்டி இங்கிலாந்து என அழைக்கப்படும் நகரம் ஆகும்.
கொள்ளையர்கள் பயணிகள், பாடசாலை மாணவர்கள், உல்லாசப் பயணிகளிடம் இருந்து பணம் மற்றும் உடைமைகளை கொள்ளை இட்டு வருகின்றனர்.
இது குறித்து உடைமைகள் மற்றும் பணத்தை இழந்தவர்கள் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தபோதிலும் தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன என பயணிகள், பாடசாலை மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும், இவ்வாறான கொள்ளைகள் பற்றி இந்த பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார், அரச பேருந்துகளில் பணி புரியும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளனர்.
பேருந்து நிலைய பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பிரிவு இருந்த போதிலும் கொள்ளைகளை தடுத்து நிறுத்த முடியாதுள்ளது.
பொலிஸார் பலமுறை முயற்சிகள் செய்தும் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முடியாதுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பாடசாலை மாணவர்கள் பயண செலவுக்கு கொண்டு வரும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்த பின்னர் அவர்கள் மீண்டும் தங்களது வீட்டிற்கு செல்ல பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மத்திய மலைநாட்டில் மிகவும் பிரபலமான நகருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள், பயணிகள் நலன் கருதி நுவரெலியா பிரதேச உயர் பொலிஸ் அதிகாரி உடன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.











