கடந்த கால அரசாங்கங்களினால் மலையகப் பகுதிகளில் பாதியில் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களை முழுமையாகக் கட்டி முடிப்பதற்காக, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வரவு – செலவுத் திட்டத்தில் 600 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
அமைச்சில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலத்தில் அவசர அவசரமாகக் கட்டப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்ட வீடுகள் பல, வசிப்பதற்குத் தகுதியற்றவையாகக் காணப்படுவதாக மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இது குறித்து உடனடியாக விரிவான விசாரணை நடத்தப்படும். அதேவேளை, பாதியில் கைவிடப்பட்ட வீடுகளைக் கட்டி முடிப்பதற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான வீடுகளின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இன்னும் ஓரிரு மாதங்களில் அவை உரிய மக்களிடம் ஒப்படைக்கப்படும்.
கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய அத்தியாவசியப் பொருட்கள், மருந்து மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்றதொரு பொருளாதார நெருக்கடி நிலை மீண்டும் ஏற்படும் என எதிர்க்கட்சியினர் பகற்கனவு கண்டனர். அத்துடன், மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள் எனவும் எதிர்பார்த்தனர். ஆனால், இன்று உலகளாவிய சூழலால் விலையேற்றம் இருந்தாலும், எவ்வித தட்டுப்பாடுமின்றி மக்கள் தங்களுக்குப் தேவையான பொருட்களைப் பெற்று வருகின்றனர்.
கடந்த கால உலகளாவிய நெருக்கடிகளால் 350 ரூபாய் வரை உயர்ந்திருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு, தற்போதைய அரசாங்கத்தின் முறையான பொருளாதாரக் கொள்கையினால் 325 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டு, எதிர்க்கட்சியினரின் நாசகாரப் பகற்கனவு கலைந்துள்ளது.
அத்துடன், நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டுக் கடன்களின்றி, இலங்கையின் சொந்த நிதியைப் பயன்படுத்தி ரம்புக்கனை – கலவெல அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டின் தனிநபர் வருமானமும் 5,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், டீசலுக்கு 100 ரூபாயும், பெற்றோலுக்கு 20 ரூபாயும் அரசாங்கம் மானியமாக வழங்கி வருகின்றது.
இன்று நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் கூக்குரலிட்டுச் சத்தமிடுபவர்கள் அனைவரும், கடந்த காலத்தில் ஊழல் மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டு நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்பவர்களாவர். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரிவதைப் போல, சிறைக்குச் செல்லவிருக்கும் இவர்களது சத்தமும் விரைவில் அடங்கிவிடும்.
கடந்த காலத்தில் ஆட்சியைப் பிடிக்கவும், அதனைத் தக்கவைக்கவும் சுயநல அரசியல்வாதிகள் பயன்படுத்திய ‘இனவாதம்’ இன்று இலங்கையில் முற்றிலும் காலாவதியாகிவிட்டது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் இனவாதத்திற்கு எதிராகவே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர். எனவே, நாட்டைச் சரியான அபிவிருத்திப் பாதைக்குக் கொண்டு செல்வதே எங்களது ஒரே இலக்காகும்.” – என்றார்.










