தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒரு சபையிலேனும் வெற்றி பெற்றால், தான் அரசியலிலிருந்து முழுமையாக விலகத் தயார் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி உதய கம்மன்பில சவால் விடுத்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்வதற்காகவே அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நாடாளுமன்ற விசேட செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மாகாண சபைத் தேர்தல் நடத்துவது குறித்து அரசுக்குள் இருவேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. மாகாண சபைத் தேர்தலை நடத்தப்போவதில்லை என்று அரசின் இயக்கச் சக்தியான ரில்வின் சில்வா குறிப்பிடுகின்றார். ஆனால், தேர்தலை நடத்தவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகின்றார்.
நான் பகிரங்கமாகச் சவால் விடுக்கின்றேன், தேசிய மக்கள் சக்தி மாகாண சபைத் தேர்தலில் ஒரு சபையிலேனும் வெற்றி பெற்றால், நான் அரசியலிலிருந்து முழுமையாக விலகுவேன். மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்வதற்காகவே அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நாடாளுமன்ற விசேட செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு உரிய காலப்பகுதிக்குள் ஒருபோதும் அறிக்கையைச் சமர்ப்பிக்காது.
2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் வரை, இந்த அரசு எந்தவொரு தேர்தலையும் நடத்தப் போவதில்லை.” – என்றார்.










