தான் புதியதொரு கட்சியை உருவாக்கியுள்ளதாகவும், இவ்வருட இறுதி முதல் அக்கட்சியின் ஊடான அரசியல் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போதே அவர் இந்தத் தகவலைப் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புதிய அரசியல் சக்தியொன்றின் தேவை நாட்டுக்குக் காணப்படுகின்றது. எமது புதிய கட்சியில் எவ்வாறான தகுதியுடைய நபர்களை இணைக்க வேண்டும் என நாம் சில கடுமையான நெறிமுறைகளை வகுத்திருந்தோம். அந்த நிர்ணயங்களுக்கமைய, தற்போது 75 சதவீதமான ஆரம்பக்கட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன.
எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டிய தகுதியும், தூய்மையான பின்னணியும் கொண்ட நபர்களைத் தேடும் பணிகள் தற்போது எம்மால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கட்சியின் ஆரம்ப காலகட்டத்தில் நானே இந்த புதிய கட்சிக்குத் தலைமை வகித்து வழிநடத்துவேன். அதன் பின்னர், கட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய தகுதியான சிறந்த இளைய தலைமுறையினருக்குத் தலைமைத்துவ இடம் தாராளமாக அளிக்கப்படும். நான் நூறு வருடங்களுக்குத் தொடர்ந்து அரசியலில் ஈடுபட முடியாது அல்லவா? அதனால் மாற்றுத் தலைமைக்கான வழிகள் எப்போதும் திறந்தே இருக்கும்.
தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் வலுவாகப் பயணித்தால், அதற்கு எமது தரப்பிலிருந்து சாதகமான ஆதரவு வழங்கப்படும். ஆனாலும், ஜனநாயக நாடொன்றில் அரசைக் கண்காணிப்பதற்கும், தவறுகளைத் தட்டிக்கேட்பதற்கும் பலமான சிறந்த மாற்றுச் சக்தியொன்று எப்போதும் களத்தில் இருக்க வேண்டும். அந்தப் பொறுப்பை எமது புதிய கட்சி ஏற்கும். எனவே, தற்போது நாடாளுமன்றத்தில் எதிரணியில் இருந்து கொண்டு மக்களை ஏமாற்றி வரும் பழைய அரசியல் கட்சிகளை மக்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்.” – என்றார்.










