கடலோர சமூகங்களின் உறுதியான மனப்பாங்கு, அன்றாடப் போராட்டங்கள் மற்றும் கண்ணியத்தை ஆழமாக சொல்லும் இந்திய மேடை நாடகமான “அலைகடல்” நாடகம் இன்றைய தினம் வியாழக்கிழமை (28) மன்னாரில் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நாடகம், நாட்டுப்புற மற்றும் நவீன அரங்கேற்றக் கலைகளின் சங்கமமாக, மக்களின் உண்மை அனுபவங்களையும் உணர்வுகளையும் வலிமையாக மேடையேற்றியுள்ளனர்.
குறித்த நிகழ்வு இன்று வியாழக்கிழமை (28) காலை 10.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மத தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளையோர்கள் குறிப்பாக மீனவ சமூகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.
நடனக் கலைஞர் ஜனாபர் ஜூனோவின் (Janafar Juno) கற்பனையிலும் இயக்கத்திலும் உருவான, நாட்டுப்புற சமகால நடனம் மற்றும் நாடக வடிவத்திலான ‘அலைக்கடல்’ (Alaikkadal) என்ற கலைப்படைப்பை இவ்வாறு அரங்கேற்றியுள்ளனர்.
தமிழ்நாடு, தனுஷ்கோடியைச் சேர்ந்த ‘கரைவலை’ மீனவ சமூகத்தின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நவீன நாடகக் கலை வடிவம், மீனவர்களுக்கும் கடலுக்குமான நெருக்கமான, அதேசமயம் சவால்கள் நிறைந்த உறவை ஆழமாக வெளிப்படுத்துகிறது.
உடல் அசைவுகள், தாளம் கதை சொல்லல் ஆகியவற்றின் ஊடாக, கடலோரச் சமூகங்கள் கடலுடன் கொண்டுள்ள உழைப்பு நினைவுகள், வாழ்வாதாரம், இழப்பு மற்றும் ஆழமான உணர்வுப் பூர்வமான பிணைப்பை இந்த ‘அலைக்கடல்’ நம் கண்முன் கொண்டு வருகிறது.
இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ‘கிரீன்பீஸ் தெற்காசியா’ (Greenpeace South Asia) அமைப்பின் உலகப் பெருங்கடல்கள் தின (World Oceans Day) நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி மன்னாரில் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இதற்காக மன்னார் கலைஞர்களுக்கு 7 நாட்கள் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்களின் நிஜக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய கலைப்படைப்பு உருவாக்கப்படவுள்ளது.
இவ்வாறு உருவாக்கப்படும் புதிய படைப்பு வரும் ஜூன் 4ஆம் திகதி இதே மன்னார் மண்ணில் அரங்கேற்றப்பட்டு, அதைத் தொடர்ந்து உலகப் பெருங்கடல்கள் தினத்தை முன்னிட்டு மன்னாரின் கதைகளை கொழும்பு வரை கொண்டு சேர்க்கும் நோக்கில், ஜூன் 7ஆம் திகதி கொழும்பிலும் மேடையேற்றப்படவுள்ளது.
















