“அரசின் முறையற்ற பொருளாதாரக் கொள்கைகளினால் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான நெருக்கடிகளை மறைப்பதற்காகவே, அமைச்சர் பிமல் ரத்நாயக்க எதிர்க்கட்சிகள் மீது வீண் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நாடகமாடி வருகின்றார். எமது தரப்பு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கவில்லை, மக்களின் துயரங்களுக்காகவே குரல் கொடுக்கின்றது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் பதிலடி கொடுத்துள்ளார்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் என்பது மக்களின் வயிற்றுப் பசியைத் தீர்த்துவிடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
“அமைச்சர் பிமல் ரத்நாயக்க போன்ற ஆளுந்தரப்பு முக்கியஸ்தர்கள், நாட்டின் யதார்த்த நிலையை உணராமல் இன்னும் மேடை முழக்கங்களை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இன்று நாட்டில் வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. வரிச் சுமைகளும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும் சாதாரண மக்களை வாழவிடாமல் நெருக்குகின்றன.
மக்களின் இந்த உண்மையான குமுறல்களையும், நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பின்னடைவையும் ‘பொய்ப் பிரச்சாரம்’ என்று கூறி தட்டிக்கழிக்க அரசு முயல்கின்றது. தங்களின் நிர்வாகத் திறமையின்மையையும், வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமையையும் மறைக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய தரப்பினர் மீது பழிபோடுவது ஆளுந்தரப்பின் பலவீனத்தையே காட்டுகின்றது.
நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இருக்கின்றது என்பதற்காக, மக்களின் ஜனநாயகக் குரலையோ அல்லது எதிர்க்கட்சிகளின் சுட்டிக்காட்டுதல்களையோ அசைக்க முடியாது என்று ஆணவத்துடன் பேசக் கூடாது. கடந்த காலங்களில் மக்கள் ஆணை எவ்வாறு மாறியது என்பதை இவர்கள் மறந்துவிடக் கூடாது.
நாட்டை மீண்டும் ஸ்திரமான பொருளாதாரப் பாதைக்குக் கொண்டு வர அரசிடம் முறையான திட்டங்கள் இல்லை. அதனால்தான், தங்களின் தோல்விகளை மூடிமறைக்க இவ்வாறான அரசியல் ரீதியான பழிவாங்கல்களையும், திசைதிருப்பும் பிரசாரங்களையும் அவர்கள் கையில் எடுத்துள்ளனர். எமது தரப்பு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கவில்லை, மக்களின் துயரங்களுக்காகவே குரல் கொடுக்கின்றது.” – என்றார்.










