பெற்றோரை சந்திப்பதற்காக ஹட்டனில் இருந்து தனியாக கொழும்பு செல்ல முற்பட்ட 7 வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளான்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நிலைய நேரக் காப்பாளரின் சாதுரியமான செயலினாலேயே இந்தச் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்புப் பகுதியில் தங்கி வேலை செய்து வரும் தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக, தான் தனியாகப் பேருந்து மூலம் கொழும்புக்குச் செல்லப் போவதாக அந்தச் சிறுவன் நேரக் காப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு செல்வதற்காகத் தனது பெரியம்மா தனக்குக் காசு கொடுத்ததாகவும் அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.
7 வயதுச் சிறுவன் ஒருவன் தனியாகக் கொழும்பு செல்ல முயன்றதைக் கண்டு சந்தேகமடைந்த நேரக் காப்பாளர், சிறுவனைப் பேருந்தில் ஏறுவதற்கு அனுமதிக்காது தடுத்து வைத்துள்ளார்.
பின்னர் இது குறித்து உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகளிடம் அச்சிறுவன் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளார்.










