இந்த ஆண்டுக்கான சிவனொளிபாத மலை பாத யாத்திரைக் காலம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை அப்பகுதிக்கு போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற 322 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன், பொல்பிட்டிய, கினிகத்தேனை மற்றும் நல்லதண்ணி ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் விசேட சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களிடமிருந்து 20 இலட்சத்து 65,000 ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளது.
இந்த விசேட தேடுதல் வேட்டையின்போது, ஹெரோயின், ஐஸ், கஞ்சா, ஹாஷ், குஷ், மாவா, மதனமோதகம் மற்றும் போதை மாத்திரைகள் ஆகிய போதைப்பொருட்கள் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
புனித பூமியான சிவனொளிபாத மலைப் பகுதிக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய போதைப்பொருள் ஒழிப்புச் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.










