உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று சிறைக்கைதியான பிள்ளையானுடன் இரகசிய சந்திப்பை மேற்கொண்டதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20.05.2026) தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஒரு வாரத்திற்குள் பிள்ளையானுக்கு பிணை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக இதன்போது மகிந்த, பசில் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் பிள்ளையானிடம் உறுதியளித்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதன்போது நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையானின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான அசாத் மௌலானாவிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல்களை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது பிரான்சில் வசித்து வரும் அசாத் மௌலானாவிடம், பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் வைத்து விசேட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்திருந்தனர்.
அந்த வாக்குமூலத்தின் விபரங்களை நீதிமன்றில் சமர்ப்பித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரே வாரத்துக்குள், சிறையில் இருந்த பிள்ளையானை எப்படியாவது பிணையில் எடுப்பதற்கான விசேட வேலைத்திட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்ததாக அசாத் மௌலானா தனது வாக்குமூலத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் வாக்குமூல ஆவணங்களும் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.










