நிதி அமைச்சின் மோசடிக்கு ஜனாதிபதியே பொறுப்பு; உண்மையை மறைத்தது ஏன் நாமல் கேள்விக்கணை!
“அரசின் இயலாமையும் ஊழல்களும் தற்போது ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றன. நிதி அமைச்சின் 2.5 மில்லியன் டொலர் காணாமல்போனது வெறும் தொழில்நுட்பக் கோளாறு அல்ல, இது அரசுக்குள் இருக்கும் திருடர்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட நிதி மோசடியாகும்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தங்காலையில் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அரசின் நிர்வாகக் குளறுபடிகளைப் பட்டியலிட்ட அவர், மேலும் தெரிவிக்கையில்,”இந்த ஆட்சியில் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் முறையற்ற விதத்தில் விடுவிக்கப்பட்டுள்ளன.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதிக விலைக்கு எண்ணெய் கப்பல்களை வரவழைக்கப்பட்டுள்ளன.இதன் உச்சக்கட்டமாக நிதி அமைச்சின் பணம் தற்போது கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த மோசடிக்கு நிதிச் செயலாளர் மாத்திரமல்ல, நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியும் பொறுப்பேற்க வேண்டும். ஜனாதிபதியின் கையொப்பம் இன்றி இவ்வாறான பாரிய கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியாது.
இந்த மோசடி நடந்து 8 மாதங்கள் ஆகியும், இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்காமல் மக்களிடமிருந்து அரசு உண்மையை மறைத்தது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“குறித்த பணப் பரிமாற்றம் தொடர்பாக மத்திய வங்கி நிதி அமைச்சிடம் வினவியுள்ளது. அதற்கு அமைச்சே அனுமதி வழங்கியுள்ளது. எனவே, திருடர்கள் அரசுக்குள்ளேயே இருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது” என்றும் நாமல் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
“மக்களின் வரிப்பணம், புலம்பெயர் தொழிலாளர்களின் அந்நியச் செலாவணி மற்றும் ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது புலம்பெயர் சமூகத்தினரால் வழங்கப்பட்ட உதவி நிதிகள் என அனைத்தும் இந்தத் திறைசேரி கணக்கிலேயே இருந்தன. இப்போது எதற்கும் பாதுகாப்பு இல்லை என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, தனது சொந்த நிகழ்ச்சி நிரலின் கீழ் ஊழல்களையே முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் மேலும் சாடினார்.


