யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில் உள்ள இரண்டு பகுதிகளிலும் இருந்தும் இன்றைய தினம் (25) வெள்ளிக்கிழமை 02 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 05 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கடந்த 05 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வுப் பணியில், 25 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 16 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணிப் பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனிதப் புதைகுழிகளில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாம் பகுதி அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் 20 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 05 நாட்களாக முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணியில், இன்றைய தினத்துடன் 25 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 16 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 29 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 5 எலும்புக்கூட்டுத் தொகுதியுடனுமாக 81 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 90 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கடந்த சில தினங்களில் அடையாளம் காணப்பட்ட சில எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமைக்கான சான்றாக அவை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை, எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்ட முறைமை, பிரேதப் பெட்டியில் வைக்கப்பட்டமை போன்றவற்றின் மூலம் அவை முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டமையால் அவற்றை மீளவும் மண் போட்டு மூடப்பட்டது.
மேலும் சித்துப்பாத்தி இந்து மயான எல்லையைச் சூழ ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் முதல் கட்டமாக இன்று துப்பரவுப் பணிகள் இடம்பெற்றன. எதிர்வரும் நாட்களில் ஸ்கான் பரிசோதனை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் தலைமையில் இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மற்றும் கலைப்பீட தொல்லியல் துறை மாணவர்கள் இன்றைய அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி இருந்தனர்.














