பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான வாக்குமூலம் நேற்றையதினம் பதிவு செய்யப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2025 டிசம்பர் 4ஆம் திகதி தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் குறித்து நேற்றையதினம் பலாலி பொலிஸார் என்னிடம் வாக்குமூலம் பதிவு செய்தார்கள்.
அன்றையதினம் இடம்பெற்ற போராட்டத்தை குழப்பும் வகையில் பொலிஸார் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டனர்.
அதற்குப் பிறகு மல்லாகம் நீதிமன்றத்தில் பொலிஸார் ஒரு பொய்யான வழக்கினை பதிவு செய்தனர்.
போக்குவரத்துக்கும், பொலிசாரின் கடமைகளுக்கும் இடையூறு விளைத்துவித்ததாக தெரிவித்தே இந்த வழக்கானது தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கத்திற்காக நாங்கள் நீதிமன்றத்துக்கு சமூகம் அளித்த நிலையில், அது தொடர்பான வாக்குமூலத்தினை பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்குமாறு நீதிமன்றம் எமக்கு அறிவுறுத்தியது.
அதன் பிரகாரம் நேற்றைய தினம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
நாங்கள் இந்த போராட்டங்களை ஜனநாயக முறையில், நீதிமன்ற கட்டளைகளுக்கு மதிப்பளித்து, பொலிசாரது அறிவுறுத்தல்களுக்கு மதிப்பளித்து நாடத்தி வருகின்றோம்.
இருந்த போதிலும், அந்தப் போராட்டத்தை நிறுத்தி சட்டவிரோத விகாரைக்கு காணியை வழங்கி விட வேண்டும் என்பதற்காக இனவாத பொலிசாரால் எங்களுக்கு எதிராக அவ்வப்போது இவ்வாறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
அதன் தொடர்ச்சியாகவே நேற்றையதினமும் இவ்வாறு வாக்குமூம் மூலம் பதிவு செய்யப்பட்டது என்றார்.










