யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராகத் திருவுளச்சீட்டு முறை மூலம் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பொன்னையா குகதாசன் தெரிவானார்.
சாவக்கேச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (23) பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
28 உறுப்பினர்களைக் கொண்ட சாவகச்சேரி பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 7 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 5 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி தலா ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன.
இந்நிலையில் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக பொன்னையா குகதாசன் முன்மொழியப்பட்டார். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் செல்வரத்தினம் மயூரன் முன்மொழியப்பட்டார்.
28 உறுப்பினர்களைக் கொண்ட சாவகச்சேரி பிரதேச சபையில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ள நீதிமன்றம் தடை உத்தரவு விதித்திருந்தது. இதனால் 27 உறுப்பினர்களிடத்தில் மாத்திரம் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
தவிசாளர் பதவிக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட பொன்னையா குகதாசன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட செல்வரத்தினம் மயூரன் ஆகியோர் தலா 10 வாக்குகளையும் பெற்றனர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் ஓர் உறுப்பினர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் 6 உறுப்பினர்கள் என மொத்தமாக 7 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
திருவுளச்சீட்டின் பிரகாரம் இடம்பெற்ற தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பொன்னையா குகதாசன் தெரிவானார்.
உப தவிசாளராக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இராமநாதன் யோகேஸ்வரன் தெரிவானார்.



