அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு தொடர்பில் முழுமையாக அரசாங்கத்தை மட்டும் விமர்சிக்க முடியாது. உலகளாவிய நெருக்கடியும் இதற்கு ஒரு காரணமாகும் என தேசிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகரும் பொறியியலாளருமான
உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தொடர்பில் இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடும்போது,
கைதுகள், விசாரணைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் குறித்து ஜனாதிபதி கருத்து தெரிவிப்பதை விட, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு குறித்தே பொதுமக்கள் பதில்களை எதிர்பார்க்கிறார்கள் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உண்மையில் நாட்டை சூறையாடிய விடயங்களுக்காக நாட்டின் ஜனாதிபதி அக்கறை செலுத்துவது காலத்தின் தேவையாகும். நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவதற்கு வளங்கள் சுறண்டப்படுவதும் மக்கள் வரிப்பணம் வீண் விரயமாவதும் ஒரு காரணமாகும்.
எனவேதான், நாம் மக்களின் தேவையறிந்து சேவை செய்வதற்கு ஊழலற்ற நேர்மையானவர்களை அடிமட்ட அரசியல் களத்திலிருந்து சிறந்த அரசியல் தலைவர்களாக உருவாக்க முயற்சி செய்கின்றோம். அதனால் கல்முனை மாநகர பிரதேச மெங்கும் இம்முறை நாம் சுயேட்சையாக தேர்தலில் களமிறங்கும் நிலையில் தேர்தல் வேட்பாளர்கள் பிரதேசத்திற்கும் நாட்டுக்கும் உகந்தவர்களாக எதிர்காலத்தில் செயற்படுவார்கள்.
எனவே, சாய்ந்தமருது கல்முனை பிரதேச மக்கள் எமது கைகளை பலப்படுத்த முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.










