அவயவங்களை இழந்த எமது மக்கள் முடங்கி போகாமல், அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களின் வழமையான செயல்பாடுகளுக்கு உதவும் ஜெய்ப்பூர் நிறுவனம் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது எமது மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்நிறுவனம் தொடர்ந்து இயங்குவதற்கு கொடையுள்ளம் கொண்டவர்கள் உங்கள் உதவிகளை வழங்க முன்வர வேண்டும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.
யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தில் புனரமைக்கப்பட்ட கட்டிடத்தின் மீள் திறப்பு விழாவும், புதிய செயற்கை கால் தயாரிப்பு திட்டத்தின் ஆரம்ப விழாவும் இன்று (26) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
யாழ்ப்பாணம், சுண்டிக்குளி, கொழும்புத்துறை வீதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, இந்தியாவின் ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் நவீன முறையை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தி, பயனாளிகளுக்கு அதை முற்றிலும் இலவசமாக வழங்கும் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புனரமைக்கப்பட்ட கட்டிடம் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டதுடன், பயனாளிகளுக்கான செயற்கை கால்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இப்புதிய செயற்றிட்டமானது, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனங்கள் மற்றும் லண்டன் ஸ்கூல் ஒவ் கொமர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. டிம் அண்ட்ராடி ஆகியோரின் நிதியுதவி மற்றும் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர், ஜெய்ப்பூர் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக எமது மண்ணில் அளப்பரிய சேவையாற்றி வருவதாகவும், போரால் எமது மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டு, அவயவங்களை இழந்திருந்த நெருக்கடியான காலகட்டத்தில், அவர்களுக்கு அருமருந்தாக அமைந்தது இந்த நிறுவனமேயாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிறுவனம் எமது மண்ணில் இயங்கி இருக்காவிட்டால், எமது மக்களில் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், இந்நிறுவனத்துக்கு போதியளவான அரச உதவிகள் கிடைக்கப்பெறவில்லை எனவும், தான் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளராக பணியாற்றிய காலப்பகுதியில், அப்போது அமைச்சின் செயலாளராக இருந்த அமரர் சிவஞானசோதி அவர்களின் ஒத்துழைப்புடன் சில உதவிகளைப் பெற்றுக் கொடுத்திருந்ததாகவும் நினைவுகூர்ந்தார்.
இன்றும் எமது மண்ணில் விபத்துக்களாலும், நீரிழிவு போன்ற நோய்களாலும் பலர் தமது அவயவங்களை இழக்கும் நிலையில், அவர்களுக்கு இந்நிறுவனத்தின் சேவை அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. .
எமது மக்களுக்கு பொருத்தமான வகையிலும், உயர்தரத்திலும், இலகுவாக அணுகக்கூடிய முறையிலும் இங்கு செயற்கை அவயவங்கள் வழங்கப்படுகின்றமை விசேட அம்சமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிறுவனத்தைப் புனரமைத்து, எமது மக்களுக்கு இலவசமாக சேவையாற்றுவதற்கு தமது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்ட ஆளுநர், இந்நிறுவனம் தனது சேவையைத் தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுக்கத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் நிறுவனத்தின் முகாமைத்துவ சபைத் தலைவர் திருமதி கோசலை மதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ்ப்பாண மாவட்ட மேலதிகச் செயலாளர் ஜெயகரன், யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் பிரதேச செயலாளர்கள், சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்களான மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

















