இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஹொரனை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் விபரம் மற்றும் அவர் வகித்த அனைத்துப் பதவிகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இடைநிறுத்தியுள்ளது.
இந்த விடயம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்ச ஊழல் சம்பவம் ஒன்று தொடர்பாக, சரித் அபேசிங்க நேற்று வியாழக்கிழமை 25ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்தே கட்சி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த இலஞ்ச ஊழல் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் 2023ஆம் ஆண்டில், சரித் அபேசிங்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினராகவோ, தொகுதி அமைப்பாளராகவோ அல்லது கட்சியின் எந்தவொரு பதவியிலுமோ இருக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஊழல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படுவதை தமது கட்சி எப்போதும் ஆதரிக்கும் எனவும், அத்தகையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் எதிர்க்காது எனவும் அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.










