முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவின் கல்விளாற்குளத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை (25) பிற்பகல் 3.00 மணியளவில் தூண்டிலில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் வீடு திரும்பாததால் இளைஞன் தந்தையார் தேடிச்சென்றபோது குறித்த இளைஞன் இன்று (26) காலை குளத்தில் மிதந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்தவர கண்ணையா அன்பரசன் எனும் 26 வயதுடைய இளைஞன் ஆவார்.
குறித்த இளைஞனுக்கு வலிப்பு வருவது வழமையென்றும் மீன்பிடிக்கச் சென்ற சமயமும் வலிப்பு ஏற்பட்டு மரணித்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
சடலத்தின் கையில் மீன்பிடிக்கும் தூண்டில் தடி பற்றிப்பிடிக்கப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கட்டுத்துவக்கு வெடித்ததில் குறித்த இளைஞனின் சகோதரரும், 2009ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் மாத்தளன் பகுதியில் இளைஞனது தாயும், சகோதரியும் மரணித்துள்ளார்கள் என்பது தொடர் துயரங்களாகும்.











