முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடலில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர் மாயமாகிய நிலையில் மீனவரை இரண்டாவது நாளாக தேடும் பணியில் ஒரு தொகுதி வலைகள் இன்றையதினம் (20.06.2025) மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (19.06.2025) அதிகாலை முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை பகுதியில் கடற்தொழிலுக்கு சென்றவேளை மீனவ படகு ஒன்று நடுக்கடலில் தனியாக யாருமற்ற நிலையில் மிதந்து வந்துள்ளது. இந்நிலையில் படகில் குறித்த நபரின் சறம் காணப்பட்டுள்ளதுடன் இரத்தக் கறையும் காணப்பட்டுள்ளது.
அதனையடுத்து தொழிலுக்கு சென்ற மீனவரின் உறவினர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மீனவரினை 8 படகுகளில் தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டிருந்த நிலையிலும் மீனவர் தாெடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று (20) அதிகாலை மீனவர்கள் 30 ற்கும் மேற்பட்ட படகுகளில் பிற்பகல் 2.30 மணி வரை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இத்தேடுதல் நடவடிக்கையில் காணாமல் போன மீனவரின் ஒருதொகுதி வலை மீட்கப்பட்டிருந்தது.
படகில் காணப்பட்ட இரத்தக் கறையினை தடயவியல் பொலிஸார் பரிசோதனை செய்து அந்த இரத்தம் மனித இரத்தம் என உறுதிப்படுத்தி உள்ளதாக காணாமல் போன மீனவரின் சகோதரன் ஊடகங்களுக்கு கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





