வன்னி மாவட்டத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த 11 பாடசாலைகளின் மீள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இன்று (04.06) தெரிவித்துள்ளார்.
பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி அமைச்சு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போதே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீள்குடியேற்ற செயலணி ஊடாக 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டிருந்த வன்னி மாவட்டத்தில் உள்ள 11 பாடசாலைகளின் மீள் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சரிடம் நான் கோரிக்கையை முன்வைத்திருந்தேன். இதன்போது எனது கோரிக்கையை ஏற்று அதற்கான நிதி ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
இதன் மூலம் வன்னி மாவட்டத்தில் 11 பாடசாலைகளின் கட்டுமாகப் பணிகள் மீள இடம்பெற்று மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.