பாகிஸ்தானிலும் துபாயிலும் நடைபெற்றுவரும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் அரை இறுதிப் போட்டிகளில் மத்தியஸ்தம் வகிப்பதற்கு ஐசிசியினால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர்கள் குழாத்தில் இலங்கையின் ரஞ்சன் மடுகல்லே, குமார் தர்மசேன ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.
எட்டு அணிகள் இரண்டு குழுக்களில் பங்குபற்றிய லீக் சுற்ற நிறைவடைந்துள்ளதுடன் அரை இறுதிப் போட்டிகள் நாளையும் நாளைமறுதினமும் நடைபெறவுள்ளன.
பாகிஸ்தானின் லாகூர், கடாபி விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெறவுள்ள நியூஸிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான சம்பியன்ஸ் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் தீர்ப்பாளராக ரஞ்சன் மடுகல்லேயும் கள மத்தியஸ்தராக குமார் தர்மசேனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குமார் தர்மசேனவுடன் போல் ரைஃபல் கள மத்தியஸ்தராக பணியாற்றவுள்ளார.
மூன்றாவது மத்தியஸ்தராக ஜோயல் வில்சனும் நான்காவது மத்தியஸ்தராக அஷான் ராஸாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் கிறிஸ் கஃபானி, ரிச்சர்ட் இலிங்வேர்த் ஆகியோர் கள மத்தியஸ்தர்களாக செயற்படவுள்ளனர்.
மூன்றாவது மத்தியஸ்தராக மைக்கல் கோவும் நான்காவது மத்தியஸ்தராக ஏட்றியன் ஹோல்ட்ஸ்டொக்கும் தீர்ப்பாளராக அண்டி பைக்ரொவ்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.