ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் – மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் விளாசினார். இந்த சீசனில் களம் இறங்கிய அனைத்து ஆட்டங்களிலும் (14 ஆட்டம்) குறைந்தது 25 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 14 ஆட்டங்களில் 25 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவின் பவுமா தொடர்ந்து 13 ஆட்டங்களில் 25 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை சூர்யகுமார் யாதவ் முறியடித்தார்.
அத்துடன் ஆரஞ்சு நிற தொப்பிக்கான போட்டியில் 3-வது இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் நடப்பு தொடரில் 5 அரைசதம் உள்பட 640 ரன்கள் குவித்துள்ளார். மேலும் ஒரு சீசனில் மும்பை அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சிறப்பையும் வசப்படுத்தினார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 618 ரன்கள் (2010-ம் ஆண்டு) எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.