10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ‘கிளைமாக்சை’ நெருங்கி விட்டது. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்சை சந்திக்கிறது.
இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற பஞ்சாப் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக தகுதி பெறும்.
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 14 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று 3-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. கடைசி 2 ஆட்டங்களில் லக்னோ, சென்னையிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால் அந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தது.
முன்னாள் சாம்பியனான குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 679 ரன்), கேப்டன் சுப்மன் கில் (649), ரூதர்போர்டு, ஷாருக்கான் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். 5 அரைசதம் உள்பட 538 ரன்கள் எடுத்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் மேட்ஸ்மேனான ஜோஸ் பட்லர் தேசிய அணிக்காக விளையாட வேண்டியதிருப்பதால் லீக் சுற்றுடன் வெளியேறினார். இது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள குசல் மென்டிஸ் (இலங்கை) அவரது இடத்தை எப்படி நிரப்புவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (23 விக்கெட்), சாய் கிஷோர் (17), முகமது சிராஜ் (15) அசத்துகின்றனர். இதுவரை 9 விக்கெட்டுகள் (14 ஆட்டம்) வீழ்த்தி இருக்கும் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானிடம் இருந்து எதிர்பார்த்த மயாஜாலம் இன்னும் வெளிப்படவில்லை.
5 முறை சாம்பியனான மும்பை அணி 14 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகள் எடுத்து 11-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. முதல் 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்ற அந்த அணி அடுத்த 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாகை சூடி எழுச்சி கண்டது. ஆனால் கடைசி 3 ஆட்டங்களில் 2-ல் தோல்வி கண்டு சற்று சறுக்கியது.
மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (5 அரைசதம் உள்பட 640 ரன்), ரோகித் சர்மா, திலக் வர்மா, நமன் திர் நல்ல நிலையில் உள்ளனர். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தென் ஆப்பிரிக்காவின் ரையான் ரிக்கெல்டன் (388 ரன்), இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸ் (233 ரன், 6 விக்கெட்) ஆகியோர் லீக் சுற்றுடன் விலகி இருப்பது அந்த அணிக்கு பலவீனமாகும். ரிக்கெல்டனுக்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஜானி பேர்ஸ்டோ தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் இணைந்து ஆடுகிறார். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (19 விக்கெட்), ஜஸ்பிரித் பும்ரா (17), ஹர்திக் பாண்ட்யா, கரண் ஷர்மா வலுசேர்க்கின்றனர்.
நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து இருக்கின்றன. அதில் முறையே குஜராத் அணி 36 ரன் மற்றும் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் குஜராத் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க மும்பை அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 5 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
குஜராத்: சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், குசல் மென்டிஸ், ரூதர்போர்டு, ஷாருக்கான், ராகுல் திவேதியா, ரஷித் கான், ஜெரால்டு கோட்ஜீ, அர்ஷத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
மும்பை: ரோகித் சர்மா, ஜானி பேர்ஸ்டோ,சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சரித் அசலங்கா அல்லது பெவன் ஜேக்கப்ஸ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.