சூடானில் ஓம்டர்மேன் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திறந்தவெளி சந்தையில் தாக்குதல் நடத்தப்பட்டதில், சுமார் 54 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாக்குதலில் பலரும் காயமடைந்த நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதலை துணை இராணுவப் படையினர் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலைக் கண்டித்த அந்நாட்டு அரசு, ‘சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீதான அப்பட்டமான மீறல்’ என்று தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதும், வைத்தியசாலைகருகில் குண்டு வீசியுள்ளனர். மேலும், வைத்தியசாலையில் வெளியே சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதும், காயமடைந்தவர்களுக்கு போதிய இடவசதியும் செவிலியர்களும் இல்லாத நிலையில், தரையிலேயே வைத்து சிகிச்சை மேற்கொள்வது தொடர்பான காணொலிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சூடானில் சுமார் 30 ஆண்டுகளாக சா்வாதிகார ஆட்சி செய்து வந்த ஜனாதிபதி ஒமா் அல்-பஷீரை, கடந்த 2019ஆம் ஆண்டு இராணுவம் கைதுசெய்து ஆட்சியைக் கைப்பற்றியது.
இதைத் தொடா்ந்து, அந்நாட்டில் இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.