காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல் குழுவிலிருந்த வெளிநாட்டு ஆர்வலர்களை, இஸ்ரேல் கைது செய்துள்ளது.
இவ்வாறு தடுத்து வைக்கப்படுள்ள ஆர்வலர்களை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்வீர், சீண்டி, துன்புறுத்தும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.
கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆர்வலர்கள் தரையில் மண்டியிட்டிருக்க, அவர்களுக்கு முன்னால் பென்-க்வீர் இஸ்ரேலிய கொடியை அசைத்து கூச்சலிடும் இந்த காணொளி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் இஸ்ரேலிய தூதர்களை நேரில் அழைத்து தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
இதற்கிடையே, இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் மைக் ஹக்கபி, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் சார்பில் இஸ்ரேலுக்கு முதன்முறையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
“உதவிக் கப்பல் பயணம் ஒரு முட்டாள்தனமான உத்தி, ஆனால் பென்-க்வீர் தனது நாட்டின் கண்ணியத்தையே காட்டிக்கொடுத்துவிட்டார்” என அவர் விமர்சித்துள்ளார்.
இருப்பினும், இந்த ஆர்வலர்களின் கப்பல் குழுவுக்கு எதிராக அமெரிக்க நிதித் திணைக்களம் தடைகளை விதித்த மறுநாளே அமெரிக்கத் தூதுவரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இதனால், இது வெறும் “வெற்று வார்த்தை” என்றும், இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டையே இது காட்டுகிறது என்றும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சாடியுள்ளனர்.










