முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தண்ணிமுறிப்பு பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அடாத்தாக பிடித்து வைத்திருப்பதால் குறித்த காணியை மீட்டுத்தரக்கோரி இன்றையதினம் (27.01.2025) காலை பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
யுத்த காலத்துக்கு முன்னர் நீண்டகாலமாக பாடசாலை இயங்கிவந்த காணியை யுத்தம் நிறைவடைந்து மீள்குடியேற்றம் வந்தபோது தனியார் ஒருவர் இந்த பாடசாலை காணியினை சுபீகரித்து பாடசாலை அடையாளங்களை அழித்து வீடு ஒன்றை அமைத்துள்ளார். அப்போதைய அரசியல் சூழல் காரணமாக போராடி குறித்த காணியை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பின்னர் உரிய முறைப்படி பிரதேச செயலக அதிகாரிகளை அணுகி அவர்கள் ஊடாகவும் குறித்த தனிநபரை வெளியேற்ற முடியாத நிலையில், இன்றையதினம் காலை பூதன்வயல் தண்ணிமுறிப்பு அ.த.க பாடசாலை அமைந்திருந்த காணிக்கு அருகாமையில் மீண்டும் பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊர்மக்கள், பாடசாலை சமூகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை குரல், சட்டம் எம்மை கைவிட்டு விட்டதா? பக்கச்சார்பற்ற தீர்வை தாருங்கள், கல்வி என்பது சம உரிமை அவை எமக்கு மட்டும் கிடைக்காதது ஏன்?, திறமை உள்ள எமது கல்வியை தட்டிப்பறிக்காதீர்கள்! போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு தற்காலிக கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பாடசாலை பூதன் வயல் பொது நோக்குமண்டபத்தில், மரங்களுக்கு கீழ் 53 மாணவர்களுடன் வசதிகளற்ற நிலையில் இயங்கி வருகின்றது. குறித்த போராட்டத்திற்கான தீர்வுகள் கிடைக்கப் பெறாத நிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களை இடைநிறுத்தி மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.