“வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுவது தவறான விடயமாகும். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அது அரசால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“போரில் உயிரிழந்த தமது உறவுகளையே நினைவு கூருகின்றோம் என அவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகின்றது. இறந்தவர்களை நினைவு கூருவது தவறில்லை. ஆனால், பிரபாகரன் உயிரிழந்த இடத்துக்கே சென்று, அவர் இறந்த நாளில் அதனைச் செய்வது தவறு.
பிரபாகரன் உள்ளிட்ட புலிகளைக் கௌரவப்படுத்தும் நோக்கில் அவர்களை நினைவு கூருவது தவறாகும். அது தேசத்துரோக நடவடிக்கையாகவே கருதப்படும். இப்படியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
தேசிய பாதுகாப்பு என வரும்போது வாக்குகளைக் கருத்திற்கொள்ளக்கூடாது. முதுகெலும்புடன் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.” – என்றார்.