இங்கிலாந்துக்கு எதிராக லண்டன், கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ள மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் இலங்கை அணி விளையாடவுள்ளது.
அத்துடன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்க, சுழல்பந்துவீச்சாளர் ப்ரபாத் ஜயசூரிய ஆகிய இருவரும் நீக்கப்பட்டு மீண்டும் குசல் மெண்டிஸ், விஷ்வா பெர்னாண்டோ ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
திமுத் கரணாரட்ன, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (தலைவர்), கமிந்து மெண்டிஸ் ஆகிய 7 துடுப்பாட்ட வீரர்களும் மிலன் ரத்நாயக்க, விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்களும் 3ஆவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.
அணியில் சுழற்பந்து வீச்சாளர் இல்லாத குறையை தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் நிரப்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரை பறிகொடுத்த இலங்கை, கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியை ஈட்டவும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் புள்ளிகளைப் பெறவும் முயற்சிக்கும் என அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, போட்டிக்கு முன்னர் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
‘முதல் இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்விகளுக்கு துடுப்பாட்ட வீரர்கள் நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடத் தவறியமையும் கணிசமான ஓட்டங்களைப் பெறத் தவறியமையுமே காரணம். நான் உட்பட துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் முழுத் திறமையுடன் துடுப்பெடுத்தாட வேண்டும்’ என தனஞ்சய டி சில்வா தெரிவித்தார்.