28.4 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

கம்போடியாவுடனான போட்டியுடன் கிரிக்கெட்டைப் போன்றே கால்பந்தாட்டத்தையும் இலங்கை இரசிகர்கள் நேசிப்பர் 

கம்போடியாவுக்கு எதிரான AFC ஆசிய கிண்ண சவூதி அரேபியா 2027 தகுதிகாண் போட்டியில் முழுமையாக எதிர்த்தாடும் உத்தியுடன் விளையாடி வெற்றிபெறுவதே இலங்கை அணியின் குறிக்கோள் என இலங்கை கால்பந்தாட்ட அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுநர் அப்துல்லா அல் முத்தய்ரி தெரிவித்தார்.

இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையில் கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் இன்று வியாழக்கிழமை (05) பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிக்கு முன்பதாக இலங்கை கால்பந்தாட்ட இல்லத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிரிக்கெட்டில் எவ்வாறு இலங்கை இரசிகர்கள் சிங்கக் கொடியை ஏந்திக்கொண்டு அணியை உற்சாகப்படுத்தகிறார்களோ அதேபோன்ற கலாசாராம் கம்போடியாவுடனான போட்டி முடிவுடன் கால்பந்தாட்டத்திலும் உருவாகி அவர்கள் கால்பந்தாட்டத்தை நேசிக்கத் தொடங்குவார்கள் எனவும் அல் முத்தய்ரி குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

‘கால்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றிபெறுவதாக இருந்தால் ஆக்ரோஷத்துடன் விளையாடவேண்டும். எனவே இலங்கை வீரர்களுக்கு எதிர்த்தாடும் (Attacking) கால்பந்தாட்ட உத்தியை நான் பயிற்றுவித்துள்ளேன். போட்டிகளின்போது அச்சம் கொள்ளக்கூடாது, நம்பிக்கையுடன் விளையாடவேண்டும். அந்த நம்பிக்கை 100 க்கு 1000 வீதமாக இருக்கவேண்டும். அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகியவற்றுடன்  சிறந்த வியூகங்கள், பந்துபரிமாற்றங்களுடன் விளையாடவேண்டும்.

‘அணியில் இடம்பெறும் வீரர்கள் அனைவரிடமும் இலங்கை இரத்தமே ஓடுகிறது. அவர்கள் எங்கு பிறந்தார்கள், எங்கு விளையாடுகிறார்கள் என்பது ஒரு பிரச்சினையல்ல. ஆனால், இலங்கையர்களான அவர்கள் ஒன்றிணைந்து விளையாடும் போது அவர்கள் அனைவரும் அரங்குக்குள் சிங்கங்கள். எனவே இன்று முதல் தேசிய கால்பந்தாட்டத்தில் ஒரு மாற்றத்தை, உத்வேகத்தைக் காணக்கூடியதாக இருக்கும். மேலும் கிரிக்கெட்டை இலங்கை இரசிகர்கள் நேசிப்பது போன்று கால்பந்தாட்டத்தையும் இன்றைய போட்டியின் பின்னர் நேசிக்க ஆரம்பிப்பார்கள்

‘உள்ளூர் போட்டிகள் நடைபெறாதது தேசிய அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுவதை ஒப்புக்கொள்ள மாட்டேன். இன்று உலகக் கால்பந்தாட்ட அரங்கில் இங்கிலாந்தில்தான் அதிசிறந்த முதல் தர கால்பந்தாட்டம் விளையாடப்படுகிறது. ஆனால், 1966க்குப் பின்னர் இங்கிலாந்தினால் உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாமல் போயுள்ளது. போட்டிகள் நடைபெறாதபோது கழக மட்டத்திலும் தனிப்பட்ட ரீதியிலும் வீரர்கள் தொடர்ச்சியாக கடும் பயிற்சியில் ஈடுபடவேண்டும். அதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். வீரர்கள் அனைவரும் தங்களது நாட்டிற்காக முழு அர்ப்பணிப்புடன் விளையாடவேண்டும். அவர்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை போட்டிக்கு போட்டி புகட்டத்தேவையில்லை. மாறாக அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ளேன்’ என்றார்.

இதேவேளை, கம்போடியாவுடனான போட்டியில் திறமையாக விளையாடி வெற்றிபெறுவதே தமது குறிக்கோள் என அணித் தலைவர் சுஜான் பெரேரா தெரிவித்தார்.

‘இலங்கை அணியில் சில காலமாக ஒரே வீரர்கள் விளையாடி வருவதால் சிறந்த புரிந்துணர்வுடனும் வெற்றிபெறும் குறிக்கோளுடனும்  கம்போடியாவை எதிர்கொள்ளவுள்ளோம். எட்டு வருடங்களுக்கு முன்னர் கம்போடியாவிடம் எனது தலைமையில் இலங்கை அணி தோல்வி அடைந்திருந்தது. ஆனால்,  தற்போது இலங்கை அணியில் மிகத் திறமையான வீரர்கள் இடம்பெறுவதால் எம்மால் சாதிக்கக்கூடியதாக இருக்கும்’ என சுஜான் பெரெரா மேலும் தெரிவித்தார்.

இலங்கையும் கம்போடியாவும் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் மோதிக்கொண்டதுடன் 2001இல் 1 – 0 என இலங்கையும் 2016இல் 4 – 0 என கம்போடியாவும் வெற்றிபெற்றிருந்தன.

சர்வதேச கால்பந்தாட்ட அணிகளுக்கான தரவரிசையில் கம்போடியா 180ஆவது இடத்திலும் இலங்கை 205ஆவது இடத்திலும் இருக்கின்றன.

எவ்வாறாயினும், உலக தரவரிசை வெறும் இலக்கங்கள் எனவும் போட்டியின்போது எந்த  அணி மிகச் சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணியே வெற்றிபெறும்  எனவும்  ஆர்ஜன்டீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கம்போடிய அணி பயிற்றுநர் பீலிக்ஸ் டல்மாஸ் தெரிவித்தார்.

‘நாங்கள் எந்த அணியையும் குறைத்து மதிப்பிடுவதில்லை. மேலும் இலங்கை அணியில் வெளிநாடுகளில் விளையாடும் வீரர்கள் இடம்பெறுவதால் எமது அணி பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிடும்’ என்றார் அவர்.

இதே கருத்தையே கம்போடிய அணித் தலைவர் தியெரி ஷந்தான் பின் தெரிவித்தார்.  

இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட தகுதிகாண் போட்டி கம்போடியாவில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறும்.                  

Related posts

பங்களாதேஷின் இடைக்கால தலைவர்!

User1

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையில் இடம்பெற்ற இந்தியாவின் நொய்டா மைதானம்

User1

டெலிகிராம் தலைவர் பாரிஸில் கைதானார்

User1

Leave a Comment