அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் என இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த்ருந்தது. இதன்படி விசா காலத்தை விட அதிகமாக தங்கியிருப்பது நாடுகடத்தலுக்கும், விசா முடிந்தும் வெளியேறாத இந்தியர்களுக்கு மீண்டும் அமெரிக்காவுக்கு வர நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா அரசு எச்சரித்திருந்தது.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பெருமளவிலான நாடுகடத்தல் சர்ச்சைக்கு மத்தியில், கல்லூரி வகுப்புகளைத் தவிர்ப்பது அல்லது அவர்களின் திட்டங்களை விட்டு வெளியேறுவது தொடர்பாக, இந்திய மற்றும் பிற வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீங்கள் (மாணவர்கள்) உங்கள் பள்ளியைப் பாதியில் நிறுத்தினால், வகுப்புகளைத் தவிர்த்தால் அல்லது உங்கள் படிப்புத் திட்டத்தை உங்கள் பள்ளிக்குத் தெரிவிக்காமல் விட்டுவிட்டால், உங்கள் மாணவர் விசா ரத்து செய்யப்படும். மேலும் எதிர்கால அமெரிக்க விசாக்களுக்கான தகுதியை நீங்கள் இழக்க நேரிடும். எந்தவொரு பிரச்சினையையும் தவிர்க்க எப்போதும் உங்கள் விசாவின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து, உங்கள் மாணவர் நிலையைப் பராமரிக்கவும்; இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.