மலையக மக்கள் இந்த நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கு நிகராக வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் திட்டமிட்டு செயல்படுகிறார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானின் அனுசரணையுடன் ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சைக்கான செயலமர்வு இரத்தினபுரி சிவன் கோவில் மண்டபத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவிச் செயலாளர் ரூபன் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கணபதி கனகராஜ் கருத்து தெரிவித்தார்.
நாட்டில் இந்திய வம்சாவளி மக்கள் பரந்துபட்ட அளவில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு சகலருக்கும் சமமான அளவில் சேவைகள் சென்று சேரும் வகையில் நமது நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் நமது சேவைகளை மட்டுப்படுத்தி விடாமல் ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்ற எமது மக்களையும் இணைத்துக் கொண்டு சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ள வேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும்.
நாம் முதலில் நுவரெலியா மாவட்டத்திலேயே இந்த பரீட்சை தயார்படுத்தல் வகுப்புகளை நடத்த ஆரம்பித்தோம். எனினும் நுவரெலியா பதுளை மட்டுமல்லாமல் ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சைக்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருக்கின்றதோ அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று இந்த செயல் அமர்வுகளை நடத்தி மலையக இளைஞர்களுக்கு உதவும்படி தலைவர் செந்தில் தொண்டமான் கேட்டுக்கொண்டார்.
அந்த வகையில் இன்று இந்த இரத்தினபுரி மாவட்டத்தில் பெருந்திரளான ஆசிரிய உதவியாளர் விண்ணப்பத்தார்களுக்கு மிகத் திறமையான வளவாளர்களைக் கொண்டு இந்த செயலமர்வை நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இரத்தினபுரி மாவட்டத்தில் பெருமளவிலானவர்கள் ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள். உங்கள் மாவட்டத்தின் வெற்றிடங்களை உங்களாலேயே நிரப்பப்பட வேண்டும். கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து அதிக ஆசிரியர்கள் இங்கு நியமிக்கப்பட்டார்கள்.
எனினும் அவர்களால் நீண்ட காலத்துக்கு இங்கு தங்கி இருந்து கற்பிக்க முடியாது. அவர்களின் பனிக்காலம் முடிவடைந்தவுடன் சொந்த மாவட்டத்திற்கு திரும்பி விடுகிறார்கள்.
அவ்வாறான நிலையில் மீண்டும் இங்கு ஆசிரியர் வெற்றிடங்கள் ஏற்படுகின்றன. அதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எதிர்காலத்தில் இங்குள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் உங்களால் நிரப்பப்படுமாக விருந்தால் இக்குறைபாடு நீக்கப்படும். ஆகவே இப்போட்டி பரீட்சையில் சிறந்த முறையில் சித்தி பெற்று சிறந்த ஆசிரியராக நீங்கள் வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.