பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ‘யுக்திய’ விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட முதல் 50 நாட்களுக்குள் 56,541 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக 2023 டிசெம்பரில் ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’ இன்றுடன் 50 நாட்களை நிறைவு செய்துள்ளது.
சந்தேக நபர்களில் 49,558 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் 142 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின், 208 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ், 970 கிராம் கொக்கெய்ன், 2600 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சா மற்றும் 3,60,000 போதை மாத்திரைகள் உள்ளிட்ட ஏனைய போதைப்பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவர்களில் 1,817 சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்பு உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையான 1,981 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன். சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவிப்பு தொடர்பில் 234 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 7,733 மில்லியன் ரூபாய் என்றும் கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் பெறுமதி 726 மில்லியன் ரூபாய் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.