ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் அணித் தலைவர்களான அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் குவித்த அபார சதங்களின் உதவியுடன் இலங்கை பலமான நிலையை அடைந்துள்ளது.
போட்டியின் 2ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 410 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் மேலும் 4 விக்கெட்கள் மீதம் இருக்க, ஆப்கானிஸ்தானைவிட 212 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்கிறது.
முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆட்டம் இழக்காமல் இருந்த நிஷான் மதுஷ்கவும் திமுத் கருணாரட்னவும் தமது ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டத்தை 93 ஓட்டங்களாக உயர்த்தியபோது மதுஷ்க 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அடுத்து களம் புகுந்த குசல் மெண்டிஸ் குறைவான நேரம் துடுப்பெடுத்தாடி 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
முன்னாள் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன 77 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது விக்கெட்டை தாரைவார்த்தார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மற்றைய இரண்டு முன்னாள் தலைவர்களான அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதங்களைப் பெற்றதுடன் 4ஆவது விக்கெட்டில் பெறுமதிவாய்ந்த 232 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.
181 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் சந்திமால் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸுடன் 107 ஓட்டங்களைப் பெற்றார். தனது 77ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் சந்திமால் குவித்த 15ஆவது சதம் இதுவாகும்.
அடுத்து களம் புகுந்த புதிய அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா தான் எதிர்கொண்ட முதலாவது பந்தில் அவசரமாக ஓட்டம் ஒன்றை எடுக்க முயற்சித்து வீணாக விக்கெட்டை இழந்தார்.
மொத்த எண்ணிக்கை 410 ஓட்டங்களாக இருந்தபோது பந்தை சுழற்றி அடித்து பவுண்டரி ஆக்கிய மெத்யூஸ், தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் விக்கெட்டில் மோதியதால் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார்.
259 பந்துகளை எதிர்கொண்ட மெத்யூஸ் 14 பவுண்டரிகள், 3 சிக்ஸ்களுடன் 141 ஓட்டங்களைக் குவித்து தனது டெஸ்ட் சதங்களின் எண்ணிக்கையை 16ஆக உயர்த்திக்கொண்டார்.
அவர் ஆட்டம் இழந்ததும் 2ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆட்ட நேர முடிவில் சதீர சமரவிக்ரம 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் நவீத் ஸத்ரான் 80 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் காயிஸ் அஹ்மத் 93 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்க்ளையும் கைப்பற்றினர்.
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 198 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.