வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாண சபைகளுக்கு 2027 நடுப்பகுதியில் தேர்தல்?
2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய நான்கு மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக அரசு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதவது:-
மாகாண சபைத் தேர்தல் தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டு வருகின்றமை மற்றும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கை சமர்ப்பித்தல் தாமதப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அரசிடம் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
“மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் ஐந்து தடவைகள் முன்னிலையாகி, தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட மற்றும் நிர்வாக அலகுச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். இருப்பினும், அந்தப் பரிந்துரைகள் மற்றும் யோசனைகளுக்கு அமைய இதுவரையில் சாதகமான தீர்மானங்கள் அல்லது உரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை” என்று தேர்தல்கள் ஆணைக்குழு, அரசின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழு கடந்த செப்டெம்பர் மாதம் தமது விதப்புரை அறிக்கையைச் சமர்ப்பிப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும், அந்தக் காலப்பகுதியில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. செயற்குழுவின் செயற்பாட்டுப் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினமாவது செயற்குழு அறிக்கை சமர்ப்பிக்குமா என்று தேர்தல்கள் ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்குப் பதிலளித்த அரசின் சிரேஷ்ட உறுப்பினர், “மாகாண சபைத் தேர்தலில் காணப்படும் சட்டச் சிக்கலுக்குத் தீர்வு கண்டவுடன் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தலை 2027ஆம் ஆண்டு நடுப்பகுதியளவில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் அடிப்படைச் சட்ட மற்றும் நிர்வாக அலகுசார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் நிர்வாகக் கட்டமைப்பில் குளறுபடிகளே தோற்றம் பெறும்.” – என்றார்.


