உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஜனாதிபதியைச் சந்திக்க இரண்டு மாதங்களாக அனுமதி இல்லை : சாணக்கியன் ஆதங்கம்!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
131 பார்வைகள்

2026.11.21 அன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சாணக்கியன், ஜனாதிபதியுடனான சந்திப்பு, நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகள், மாகாணசபைத் தேர்தல், க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம், மனித உரிமைகள் மீறல்கள், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களைச் சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு அனுமதி கோரல்

ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்திப்பது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட கருத்து உண்மையானது எனத் தெரிவித்த சாணக்கியன் எம்.பி., பிரதமர் ஹரிணி அமரசூரியவைப் பாராளுமன்றத்தில் சந்திப்பதற்கு அனுமதி கோரினால் அவர் உடனடியாகச் சந்திப்பதற்கு அனுமதி வழங்கி கலந்துரையாடுவதாகவும், அதற்காகப் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனினும், கடந்த இரண்டு மாதங்களாக ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு முடியாத நிலை காணப்படுவதாகவும், மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியிடம் அனுமதி கோரியிருந்தும் இதுவரையில் சந்திப்புக்கான அனுமதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதியால் மாத்திரமே முடியும் என்பதால், குறித்த சந்திப்புக்கு விரைவில் ஏற்பாடு செய்து தருமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வினைத்திறனாக அமைய வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச சபையில் பொலிஸாரால் அறவிடப்படும் தண்டப்பணங்கள் பிறிதொரு பிரதேச சபைக்குப் பொறுப்பாக்கப்படும் பிரச்சினை தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் அறிவித்தும் இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை எனச் சாணக்கியன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் நீதியமைச்சரிடம் பலமுறை எடுத்துரைத்தபோதும், நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஊடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும், சுமார் ஒரு வருடமாக இக்கோரிக்கை இழுபறி நிலையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

நீதிச்சேவை ஆணைக்குழு தனது செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், நீதிமன்றப் பதிவாளர் சேவையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையினால் நீதிமன்ற நடவடிக்கைகளும் தாமதமடைவதாகக் குறிப்பிட்டார்.

மாகாணசபைத் தேர்தலை அடுத்த ஆண்டாவது நடத்த வேண்டும்

இறுதியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்திய தேர்தல்கள் ஆணைக்குழு, பல ஆண்டுகளாகப் பிற்போடப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தல்களையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சாணக்கியன் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

இவ்வாண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி அடுத்த ஆண்டிலாவது மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மட்டக்களப்பு கடற்கரைகளைத் தூய்மைப்படுத்த விசேட இயந்திரம் வழங்கப்பட வேண்டும்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாகச் சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை வரவேற்ற சாணக்கியன் எம்.பி., பம்பலப்பிட்டி புகையிரத நிலையம் புதுப்பிக்கப்பட்டு அதனைச் சூழவுள்ள பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் பியர் போத்தல்கள், தடுப்பூசிக் குப்பிகள் மற்றும் பல்வேறு பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கரையொதுங்குவதாகவும், இவை உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்பட்டுக் கொட்டப்படுபவை அல்ல என்றும், கடலில் பயணிக்கும் கப்பல்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளே இவ்வாறு கரையொதுங்குவதாகவும் தெரிவித்தார்.

எனவே, கடற்கரைகளைத் தூய்மைப்படுத்துவதற்கான விசேட இயந்திரமொன்றை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததுடன், களுவாஞ்சிக்குடி பிரதேச சபையும் இத்தகைய யோசனையை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் பொது இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய மலசலக்கூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் கவனத்திற்கொள்ள வேண்டும்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த சாணக்கியன் எம்.பி., ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள கரிசனைகளைச் சுட்டிக்காட்டினார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் உள்ளடக்கங்கள் காணப்படுவதாகவும், அடிப்படை உரிமைகளை அச்சுறுத்தும் ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியமைச்சருக்கு அறிவித்து, குறித்த சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு கோரியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதேபோன்று, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதிக்கும் ஏற்பாடுகள் மற்றுமொரு சட்டமூலத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களையும் பரிந்துரைகளையும் கவனத்திற்கொள்ளாமல் இவ்வாறான சட்டமூலங்களை எவ்வாறு நிறைவேற்ற முடியும் எனக் கேள்வி எழுப்பிய அவர், பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பிலும் சந்தேகம் வெளியிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மக்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டமை மற்றும் காணி விடுவிப்பு தொடர்பான பிரச்சினைகள் இதுவரையில் தீர்க்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், காணி விடுவிப்பு தொடர்ந்து இழுத்தடிக்கப்படுவதால் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட நீதிக்காகக் குரல்கொடுக்கும் பல்வேறு தரப்பினரும் பாதுகாப்புத் தரப்பினரால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வைப் பெற முயற்சி

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதியமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலளித்த சாணக்கியன் எம்.பி., தொல்லியல் நிபுணர் சோமதேவ சமர்ப்பித்த அறிக்கை வெறும் அறிக்கை மாத்திரமே என நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளதாகவும், நீதிமன்றமும் அதனை அவ்வாறே குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் டி.என்.ஏ பரிசோதனைக்கு முன்வரத் தயாராக இருப்பவர்கள் தொடர்பில் சத்தியக்கடதாசிகளைப் பெற்றுக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மாவீரர் தினத்தில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து, அதற்காகப் பணம் பெற்றுக்கொள்வோர் மற்றும் போராட்டங்களுக்கு ஆட்களை அழைத்து வருவதற்காகப் பணம் பெறுவோர் பாராளுமன்றத்திலும் இருப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தாங்கள் அவ்வாறான கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதிமன்றத்தின் ஊடாகவே நீதியைப் பெற்றுக்கொள்ளத் தாம் முயற்சிப்பதாகவும், தமது கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையிலும் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் கீழ் மனித உரிமை மீறல்கள் தீவிரமடைந்துள்ளமை கவலைக்குரியது எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றப் பணியாளர்களின் மேலதிக கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும்

பாராளுமன்றப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் 750 ரூபா மேலதிகக் கொடுப்பனவு கடந்த பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய சாணக்கியன் எம்.பி., தற்போதைய பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு குறித்த கொடுப்பனவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இவ்வாறு ஜனாதிபதியுடனான சந்திப்புக்கான அனுமதி முதல் வடக்கு, கிழக்கு மக்களின் மனித உரிமைகள், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம், மாகாணசபைத் தேர்தல், மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களை 2026.11.21 அன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் இரா. சாணக்கியன் எம்.பி. முன்வைத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

124 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

116 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடல் அனர்த்தம்: காணாமல் போன மற்றைய மாணவரின் சட@லமும் பொத்துவில் கோமாரி கடற்பரப்பில் மீட்பு 

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடலில் நீராடச் சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மற்றைய மாணவரின் சடலமும் நள்ளிரவு பொத்துவில்…

141 0 0