பருத்தித்துறை – சுப்பர்மடத்தில் மாவீரர் வார இரத்ததான முகாம்
மாவீரர் வாரத்தை முன்னிட்டுப் பருத்தித்துறை – சுப்பர்மடத்தில் நேற்று சனிக்கிழமை இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.
சுப்பர்மடம் வாழ் மக்களின் ஏற்பாட்டில் சுப்பர்மடம் பொதுநோக்கு மண்டபத்தில் இந்த இரத்ததான முகாம் நடைபெற்றது.
பருத்தித்துறை இரத்த வங்கியில் நிலவும் குருதித்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் பலர் ஆர்வமுடன் பங்கேற்றுக் குருதிக் கொடை வழங்கினர்.
இரத்ததான முகாமிற்கு முன்னதாகக் காலை 9.00 மணிக்கு மாவீரர் வாரத்தின் முதலாம் நாள் தொடக்க நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மாலைகள் அணிவிக்கப்பட்டுப் பொதுச்சுடர் மற்றும் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன், சுப்பர்மடம் மற்றும் அயல் கிராமங்களைச் சேர்ந்த மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












