கம்பர்மலை மாவீரர் நினைவாலயத்தில் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி நிகழ்வு!
தமிழ்த் தேசிய மாவீரர் வாரத்தின் முதலாவது நாளாகிய நேற்று சனிக்கிழமை வல்வெட்டித்துறை – கம்பர்மலை சந்தியில் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
வல்வெட்டித்துறை – உடுப்பிட்டி பிரதான வீதியில் கம்பர்மலை சந்தியில் உள்ள மாவீரர் நினைவாலயத்தில் சுடரேற்றி, மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும் வடமராட்சி அமைப்பாளருமான வி. கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வல்வெட்டித்துறை பதில் நகரபிதா நா. பத்மநாதன், நகர சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, மாவீரர் வாரத்தை முன்னிட்டு அந்தப் பகுதி மக்களினால் கடந்த தினத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, மாவீரர் நினைவாலயம் மற்றும் கொடி மேடை ஆகியவற்றுக்குச் சிவப்பு மற்றும் மஞ்சள் வர்ணம் பூசப்பட்டுத் தயார்ப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






