அநுர அரசின் உள்ளகப் பொறிமுறையில் எவ்வாறு நம்பிக்கை வைப்பது? : சாணக்கியன் எம்.பி. கேள்வி
“இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் எச்சரிக்கைகளையும் அரசு கவனத்திற்கொள்ளாமல், சர்வதேச சமூகத்திடம் உள்ளகப் பொறிமுறைகள் ஊடாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த முடியும் என்று எவ்வாறு கூற முடியும்?
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.
நேற்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூலம், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடரும் மனித உரிமை மீறல்கள், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம், நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகள், மாகாண சபைத் தேர்தல் மற்றும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயற்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசின் கவனத்தை ஈர்த்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த சாணக்கியன் எம்.பி., ஆணைக்குழு அண்மையில் முன்வைத்துள்ள முக்கியமான பரிந்துரைகள் தொடர்பில் அரசின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் விவாதிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், உள்ளகப் பொறிமுறைகள் ஊடாகவே நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த முடியும் என்று அரசு தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும், இலங்கையின் சொந்த மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைக்கும் பரிந்துரைகளைக்கூட அரசு நடைமுறைப்படுத்தத் தயாராக இல்லாத நிலையில், உள்ளகப் பொறிமுறைகளின் நம்பகத்தன்மை குறித்துப் பாரிய சந்தேகங்கள் எழுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூலம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்தச் சட்டமூலத்தில் ஏற்கனவே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளை ஒத்த சரத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும், மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் காணப்படுகின்றன என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தது. அத்துடன், அந்தச் சட்டமூலத்தை மீளப்பெறுமாறும் ஆணைக்குழு வலியுறுத்தியிருந்தது என்றும் சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.
இதேவேளை, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பிலும் கடந்த மாதம் மனித உரிமைகள் ஆணைக்குழு நீதி அமைச்சருக்குக் கடிதமொன்றை அனுப்பியிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு மக்களின் அடிப்படை உரிமைகளையும் தனிநபர் சுதந்திரங்களையும் பாதிக்கும் வகையிலான ஏற்பாடுகள் அந்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்திருந்ததை அவர் நினைவுபடுத்தினார்.
“இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவே இந்தச் சட்டமூலங்களில் அடிப்படை உரிமைகளை அச்சுறுத்தும் ஏற்பாடுகள் காணப்படுகின்றன என்று கூறுகின்றது. அவற்றைத் திருத்தாமல் அரசு எவ்வாறு இந்தச் சட்டமூலங்களை நிறைவேற்ற முடியும்? இது மிகவும் பாரதூரமான பிரச்சினையாகும்” என்றும் சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
மேலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக்கூட கவனத்திற்கொள்ளாத அரசு, பொறுப்புக்கூறல் விவகாரத்தில் உண்மையில் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
“சொந்த நாட்டின் சுயாதீன மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எச்சரிக்கைகளையே அரசு புறக்கணிக்குமாயின், உள்ளகப் பொறிமுறைகள் ஊடாக நீதி கிடைக்கும் என்று தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக நிலவிவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும் சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக மக்களின் காணி உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள், பாதுகாப்புத் தரப்பினரின் அச்சுறுத்தல்கள் மற்றும் நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கில் மக்களின் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து இழுத்தடிக்கப்படுவதால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை அனுபவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, தங்களது சொந்தக் காணிகளுக்குத் திரும்ப முடியாமல் பல குடும்பங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நீதிக்காகக் குரல் கொடுக்கும் பல்வேறு தரப்பினரும் பாதுகாப்புத் தரப்பினரால் அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புதிய அரசின் கீழும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்வது கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கும் சாணக்கியன் எம்.பி. பதிலளித்தார்.
தொல்லியல் நிபுணர் பேராசிரியர் சோமதேவ சமர்ப்பித்த அறிக்கை வெறும் அறிக்கை மாத்திரமே என நீதி அமைச்சர் குறிப்பிட்டார் என்றும், நீதிமன்றமும் அவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது என நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி நீதிமன்றத்தின் ஊடாகத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், செம்மணி விவகாரம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் நேரடியாக முன்னிலையாகியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், டி.என்.ஏ. பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தயாராக உள்ளவர்கள் தொடர்பில் சத்தியக்கடதாசிகளைச் சமர்ப்பித்து, மேலதிக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார் என்றும் சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.
“செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நாங்கள் நீதிமன்றத்தின் ஊடாகவே நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம். எமது கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்” என்றும் அவர் கூறினார்.
மாவீரர் தினத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்காகப் பணம் சேகரிப்பவர்களும், ஆர்ப்பாட்டங்களுக்கு மக்களை அழைத்துவருவதற்குப் பணம் பெறுபவர்களும் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகளில் தாங்கள் ஈடுபடப்போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையிலும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் இவ்வாறான முக்கியமான விடயங்களைப் புரிந்துகொள்ளும் அறிவுகூட இல்லாமல் செயற்படுகின்றார் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழியில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி கிடைப்பதற்கு நம்பகமான விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளுமே அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பொலிஸாரினால் அறவிடப்படும் தண்டப்பணம் வேறொரு உள்ளூராட்சி மன்றத்துக்குப் பொறுப்பாக்கப்படுகின்றமை தொடர்பில் நீண்டகாலமாகப் பிரச்சினை நிலவுகின்றது என்று சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதி அமைச்சரிடம் பலமுறை இந்தப் பிரச்சினையை எடுத்துரைத்த போதிலும், நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஊடாகவே இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்து வருகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் ஒரு வருடகாலமாக இந்தக் கோரிக்கை தீர்க்கப்படாமல் இழுபறி நிலையில் காணப்படுகின்றது என்றும், நீதிச்சேவை ஆணைக்குழு தனது செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், நீதிமன்றப் பதிவாளர் சேவையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினைகளுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
பல ஆண்டுகளாகப் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டிலாவது நடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும் என்றும் சாணக்கியன் எம்.பி. வலியுறுத்தினார்.
தேர்தல்கள் ஆணைக்குழு இறுதியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தியுள்ள போதிலும், மாகாண சபைத் தேர்தல் தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாகாண மட்டத்தில் மக்களுக்கான ஜனநாயகப் பிரதிநிதித்துவம் நீண்டகாலமாக இல்லாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி 2027ஆம் ஆண்டிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயற்றிட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்படும் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.
குறிப்பாக பம்பலப்பிட்டி ரயில் நிலையம் அழகாகப் புனரமைக்கப்பட்டுள்ளதையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதையும் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் பாரியளவில் கழிவுப்பொருள்கள் குவிந்து காணப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக பியர் போத்தல்கள், மருத்துவக் குப்பிகள் மற்றும் பல்வேறு பிளாஸ்டிக் பொருள்கள் கடற்கரைகளில் ஒதுங்கிக் கிடக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். இவை அனைத்தும் அப்பகுதி மக்களால் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் அல்ல என்றும், கடலில் பயணிக்கும் கப்பல்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருள்கள் கடல் அலைகள் ஊடாகக் கரையொதுங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான கழிவுகளை அகற்றுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விசேட கடற்கரைத் தூய்மைப்படுத்தல் இயந்திரமொன்றை வழங்குமாறு அரசிடம் அவர் கோரிக்கை விடுத்தார். களுவாஞ்சிக்குடி பிரதேச சபையும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் பொது இடங்களில் போதுமான பொதுக் கழிப்பறை வசதிகள் இல்லாதிருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் தேவையான மலசலகூட வசதிகளை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் 750 ரூபா மேலதிக கொடுப்பனவு கடந்த பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை என்றும் சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டினார். வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், நாடாளுமன்ற ஊழியர்களின் சேவையையும் பொறுப்புகளையும் கருத்திற்கொண்டு இந்தக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசு வழங்கும் வாக்குறுதிகள் நடைமுறையிலும் பிரதிபலிக்க வேண்டும் என்றும் சாணக்கியன் எம்.பி. வலியுறுத்தினார்.
மக்களின் அடிப்படை உரிமைகளை அச்சுறுத்தும் சட்டமூலங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை அரசு புறக்கணிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடரும் காணிப் பிரச்சினைகள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், அடிப்படைச் சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான நீதிக்கான கோரிக்கைகள் ஆகியவற்றுக்கு அரசு உரிய தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“உள்ளகப் பொறிமுறைகள் ஊடாக நீதி வழங்க முடியும் என்று சர்வதேச சமூகத்திடம் கூறும் அரசு, முதலில் தனது சொந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். மனித உரிமைகள் பாதுகாப்பும் பொறுப்புக்கூறலும் வெறும் வார்த்தைகளில் மாத்திரம் இருக்கக்கூடாது. அவை அரசின் செயற்பாடுகளிலும் வெளிப்பட வேண்டும்.” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


