சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொ*லை; பிரதான சந்தேகநபர் கைது.!
கொழும்பு – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய பிரதான பாதாள உலகக் கும்பல் சந்தேகநபர் மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போதே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
காலி, ஏத்கந்துர பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேகநபர், கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்குரேகொட பகுதியில் வைத்து சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் நாட்டுக்குள் நுழையும் போது உடனடியாகக் கண்டறியும் வகையில், விமான நிலையத்தின் தானியங்கி முக அங்கீகார அமைப்பில் இவருடைய விவரங்கள் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இந்தக் கைது நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது.
பொலிஸாரின் தகவல்களின்படி, இந்தச் சந்தேகநபர் கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சட்டவிரோத போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பத்தேகம பொலிஸாராலும், பின்னர் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் எம்பிலிப்பிட்டிய பொலிஸாராலும் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்விரு சந்தர்ப்பங்களிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.